திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் பாஜக சார்பில் 11 மாவட்ட மைய குழு பொறுப்பாளர்கள்  பங்கேற்ற ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2021-ல் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்று கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.  முன்னதாக நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். 
அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகியவை பெரிய கட்சிகள்தான். பாஜகவின் வாக்கு வங்கி என்ன என்பது தேர்தலில் தனியாக நின்றால்தான் தெரிய வரும். அதேவேளையில் பாஜகவின்  வளர்ச்சி தமிழகத்தில் அதிகரித்துள்ளது கண்கூடாகத்  தெரிகிறது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினி விருப்பபட்டால் பாஜக அவருடன் கூட்டணி வைக்கும்.  கட்சி வாய்ப்பளிக்குமானால் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட நான் தயார்.


கன்னியாகுமரியில் ஏற்கனவே பாஜகதான் போட்டியிட்டது. எனவே இடைத்தேர்தலில் பாஜகவே போட்டியிடும். பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் உறுதியாக வெற்றி பெறுவார்” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.