கொரோனா தொற்றில் இறந்த ஜெ.அன்பழகன் மாவட்டச்செயலாளராக இருந்த பதவியை கைப்பற்ற காத்திருந்த கு.க செல்வம் ஏமாற்றம் அடைந்தார். அந்த இடத்திற்கு சிற்றரசு நியமிக்கப்பட்டார். தனக்கு மா.செ பதவி கொடுக்கவில்லை என்று கோபித்துக்கொண்டு டெல்லி பறந்தார் செல்வம். அங்கு பாஜக தேசிய பதவியில் இருக்கும் ஜேபி.நட்டாவை சந்தித்து திமுகவிற்கு ஷாக் கொடுத்தவர் செல்வம்.பாஜக வாய்ப்பு கொடுத்தால் வர இருக்கின்ற சட்டமன்றத்தேர்தலில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி மீண்டும் எம்.எல்.ஏவுக்கு போட்டியிடபோவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. 


 
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்ததால் திமுகவின் முக்கியமான பதவிகளிலிருந்து நீக்கப்பட்டார். திமுக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படும் முன்னர் அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால் அவரது விளக்கம் திருப்திகரமானதாக இல்லை என திமுக தலைமை கு.க.செல்வத்தை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியது.


 
இடையே ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவின்போது கு.க.செல்வம் பாஜக சென்னை அலுவலகம் சென்று வந்ததால் அடுத்து அவர் பாஜகவில் இணைவார் என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. முன்னதாக கு.க.செல்வம் அதிமுகவில் இருந்தவர் என்பதால் மீண்டும் அதிமுக செல்ல வாய்ப்பிருப்பதாகவும் பேசிக் கொள்ளப்பட்டது.ஆனால் இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் உடைத்து தனது கருத்தை முன் வைத்துள்ளார் கு.க.செல்வம். அதில், அவர் 'தான் எந்த கட்சியிலும் இனி இணைய போவதில்லை' என்றும் கட்சி சாரா எம்.எல்.ஏவாக தனது பணியை தொடர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 பாஜகவில் இணைவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆனால், ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வாய்ப்பு கொடுத்தால் போட்டியிடப்போவதாகவும் அவர் குறிபிட்டுள்ளது திமுகவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.