தமிழகம் ஆன்மீக பூமி என்பதை பெருமாளும், அத்திவரதரும் நிரூபித்து வருகின்றனர் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார். 

தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடியில் பேட்டியளிக்கையில் மோடி அரசு தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. மருத்துவ காப்பீடு திட்டம், செல்ல மகள் சேமிப்பு திட்டம், பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்தி வருகிறது. வேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க. பொய் பிரசாரம் செய்து வருகிறது.

 

சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். ஆனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் தி.மு.க. உட்கட்சி பூசல் காரணமாக கொலைகள் அரங்கேறி வருகிறது என தமிழிசை குற்றம்சாட்டியுள்ளார். புதிய கல்வி கொள்கை, முத்தலாக் உள்ளிட்ட சட்டத்திற்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால் மத்தியில் நல்லாட்சி நடைபெற்று வருகிறது. 

தமிழகம் ஆன்மீக பூமி என்பதை பெருமாளும், அத்திவரதரும் நிரூபித்து வருகின்றனர். ஆன்மீகம் தழைத்தோங்க வேண்டும் என்கிற கொள்கையோடு பாஜக களத்தில் இறங்கி உறுப்பினர் சேர்க்கை நடத்தி வருகின்றோம். உறுப்பினர் சேர்க்கை எங்களுக்கு தமிழகத்தில் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று தரும். மொத்தம் எவ்வளவு பேர் சேர்ந்துள்ளனர் என்பது குறித்து வருகிற 11-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தமிழிசை கூறியுள்ளார்.