முதல்வருக்கு உபதேசம் பண்ணும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மட்டும் தனது உதவியாளர் இல்லத்திருமணத்திற்கு ஹெலிகாப்டரில் செல்லலாமா என்று கிண்டல் செய்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை ட்வீட் செய்துள்ளார். இவர்தான் ஏழைப் பங்காளர் எனவும் விமர்சனம் செய்துள்ளார்.

 

முன்னதாக கஜா புயல் கடந்த 15-ம் தேதி இரவு நாகை- வேதாரண்யம் இடையே கரையைக் கடந்தது. இதில் நாகை, புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் புயல் ருத்ரதாண்டவம் ஆடியது. ஏராளமான பயிர்களும், வீடுகளும், பொருட்களும் பெருத்த சேதம் ஏற்பட்டது. மின் இணைப்பு முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. 

இதனிடையே கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஹெலிகாப்டரில் சேதங்களை பார்வையிட்டனர். இதற்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். 

இந்நிலையில் இது தொடர்பாக தமிழிசையின் டுவிட்டர் பக்கத்தில் முதலமைச்சர் வெள்ளச் சேதங்களை பார்வையிட ஹெலிகாப்டரில் சென்றதை விமர்சித்த ஸ்டாலின், சேலத்தில் தன் உதவியாளர் இல்லத் திருமணத்திற்காக சொந்த சொகுசு விமானத்தில் பயணம்? ஏழை பங்காளர்கள்" எனப் பதிவிட்டிருக்கிறார்.