ரஜினிகாந்த்  அரசியலுக்கு வந்தே ஆக வேண்டும்! கட்சி துவங்க வேண்டும்!...என்றெல்லாம் அவரது ரசிகர்களை விட அதிகம் எதிர்பார்த்தது பா.ஜ.க.தான். காரணம், ஆன்மிக பிரியரான ரஜினி, நிச்சயம் தங்களை ஆதரிப்பார்! எனும் நம்பிக்கையில்தான்.ஆனால் ரஜினியோ கட்சி துவக்காமல் இழுத்துக் கொண்டே போகும் நிலையில், ‘ரஜினி பா.ஜ.க.வில் வந்திணைந்தால் வரவேற்போம்!’ என்று ஓப்பனாக அழைப்பு விடுத்தார் பொன்.ராதாகிருஷ்ணன். எப்படியாவது ரஜினியை பா.ஜ.க.வுக்குள் அழைத்து வந்துவிட வேண்டும்! வந்துவிட்டால் அவரையே மாநில தலைவராக்கிவிடுவது! ரஜினியை விட்டால் தமிழகத்தில் தாமரையை மலர செய்ய வேறு வழியே இல்லை! என்று டெல்லி மேலிடம் முடிவு கட்டியதே இந்த ஓப்பன் அழைப்பின் பின்னணி. பா.ஜ.க.வின் இந்த முயற்சியை மையமாக வைத்து ரஜினியை இந்துத்வ ஆதரவாளராக சித்தரித்து விமர்சனங்கள் தொடர்ந்து வெடித்தன. இதை ஒரு கட்டத்தில் சகிக்க முடியாத ரஜினியோ ’எனக்கு காவி சாயம் பூச பார்க்கிறார்கள். ஆனால் நான் சிக்க மாட்டேன்!’ என்று கமல்ஹாசன் பிறந்தநாள் விழாவில் வெளிப்படையாக அறிவித்தார். இதன் மூலம் ரஜினிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையிலான கனெக்டிவிட்டி அறுந்தது. 


வழக்கமாக ரஜினியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லும் மோடி இந்த முறை அதை தவிர்த்தார். அதேபோல் மற்ற பா.ஜ.க.வினரும் ரஜினி பற்றிப் பேசுவதை தவிர்த்தனர். சொல்லப்போனால் சிலரோ ரஜினியை அதன் பின் விமர்சிக்கவே துவங்கினர் பா.ஜ.க.வில். ஆனால் கோபமும், முருக்கும்  கொஞ்ச நாள்தான் என்பது போல், இதோ இப்போது மீண்டும் ரஜினியை தாங்கிட துவங்கிவிட்டதோ பா.ஜ.க? என்பது போன்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆம் பா.ஜ.க.வின் தேசிய செயலாளரான ஹெச்.ராஜாவின் பேச்சுக்கள் அப்படித்தான் நினைக்க வைக்கின்றன. பெரியாரை விமர்சித்து ரஜினிகாந்த் பேசிய பேச்சு பெரும் விவகாரமாகி இருக்கும் நிலையில், அவருக்கு எதிராக பல மாவட்டங்களில் வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில் ரஜினிக்கு  ஆதரவாக பேசியிருக்கும் ஹெச்.ராஜா....“இந்து கடவுள்களை ஈ.வெ.ரா. இழிவு படுத்தியவர். அவரது ஹிந்து விரோத நடவடிக்கைகளில் சிலவற்றைத்தான் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். இதனால் ரஜினி மீது சட்ட ரீதியாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாது.” என்று சொல்லியிருக்கிறார். ரஜினிக்கு ஆதரவாக பா.ஜ.க.வின் மிக முக்கிய தேசிய நிர்வாகியே இப்படி கருத்து சொல்ல  துவங்கியிருப்பதால், மீண்டும் ரஜினியிடமே சரணாகதி அடைகிறது தமிழக பா.ஜ.க! அவரை விட்டால் தங்கள் கட்சியை தலைநிமிர செய்ய வேற ஆளே கிடையாது என்று இதன் மூலம் ஒப்புக்கொள்கிறார்கள் போல. ஆனால் ரஜினி அவ்வளவு எளிதில் சிக்கமாட்டார். இப்போது அவர் நடித்து வரும் சன்பிக்சர்ஸ் நிறுவன படம் முடிந்ததும், ராஜ்கமல் நிறுவன தயாரிப்பில் ஒரு படம் பண்ணுகிறார். எனவே அவர் அரசியலுக்கு வருவது டவுட்டுதான்! என்கிறார்கள். பாவம் பா.ஜ.க!