தர்மாகோல் ஆராய்ச்சியில் இருந்த செல்லூர் ராஜூ - பாஜகவின் அமர் பிரசாத் காட்டம்
இத்தனை நாட்கள் தெர்மகோல் ஆராய்ச்சியில் இருந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, திமிரில் பேசக் கூடாது என பா.ஜ.,வுக்கு ஆலோசனை சொல்லுகிறார். அவர் தன்னை வளர்த்துக் கொண்ட பின் கருத்துச் சொன்னால் நல்லது என்று பாஜக மாநில விளையாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார்.
பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக அதிமுகவில் இணைந்து வரும் நிலையில், அதிமுக - பாஜக இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் அமைச்சரும், அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜூ இது தொடர்பாக கூறுகையில், “பாஜகவினருக்கு சகிப்புத்தன்மை இல்லை. அதிமுக, திமுக, பாஜக என ஜனநாயக நாட்டில் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சியில் இணைவது இயல்பான ஒன்று தான். அதிமுகவில் இருந்து பாஜகவில் இணைந்த போது இனித்தது. தற்போது கசக்கிறதா?
பாஜகவினருக்கு சகிப்புத் தன்மை, வாய் அடக்கம் தேவை. வாய்கொழுப்போடு பேசக்கூடாது. மத்தியில் ஆட்சியில் இருக்கின்றோம் என்கிற திமிரில் நடந்துகொள்ளக் கூடாது. ஒரு காலத்தில் பாஜக என்றால் மதிக்கக்கூடியவர்களாக இருந்தனர். தற்போது பாஜகவில் தகுதியற்றவர்கள் விஷக்கிருமிகள் உள்ளனர். இவர்களை எல்லாம் அடக்கி வைக்கவேண்டிய அண்ணாமலை வாய்க்கொழுப்போடு பேசுகிறார் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் செல்லூர் ராஜூவின் கருத்துக்கு பாஜக மாநில விளையாட்டுப் பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி காட்டமாக பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இத்தனை நாட்கள் தெர்மகோல் ஆராய்ச்சியில் இருந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, திமிரில் பேசக் கூடாது என பா.ஜ.,வுக்கு ஆலோசனை சொல்லுகிறார். அவர் தன்னை வளர்த்துக் கொண்ட பின் கருத்துச் சொன்னால் நல்லது” என்று குறிப்பிட்டுள்ளார்.