பிஜேபி உள்ளிட்ட தங்களின் கூட்டணி கட்சிகளை வீழ்த்திய வெற்றித் தளபதியாக ஸ்டாலின் வீற்றிருக்கிறார்  என பாஜக மூத்த தலைவரும் அடுத்த தமிழக பாஜக மாநிலத்தலைவர் பதவிக்கு போட்டியில்  உள்ள சிபி.ராதாகிருஷ்ணன் புகழ்ந்துள்ளார். அவரின் பேச்சால் பாஜகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

திமுகவின் முன்னாள் இளைஞரணி செயலாளர் வெள்ளக்கோவில் சாமிநாதன் இல்லத் திருமண விழா திருப்பூரில் நடைபெற்றது, அதில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையேற்று திருமணத்தை நடத்திவைத்தார் , அதில் கொங்குமண்டலத்தில் உள்ள பல்வேறு அரசியல்கட்சி பிரதிநிதிகள் மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டனர். அதில் பாஜகவின் மூத்த தலைவரும்  தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளவருமான சிபி ராதாகிருஷணன்  கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.  திமுகவையும் அதன் தலைவரையும் விமர்சித்து பேசுவது பாஜக தலைவர்களின் வாடிக்கை என்றிருந்து வரும் நிலையில். அனைத்திற்கும் எதிர்மாறாக திமுக தலைவரை புகழ்ந்து பேசியுள்ளார் சிபி. ராதாகிருஷ்ணன். 

அவர் பேசியதின் விவரம் பின் வருமாறு:- தமிழக அரசியலில் கருணாநிதிக்குப் பிறகு ஆளுமை மிக்க தலைவர் யார் இருக்கிறார் என்று பார்க்கும் போது, தளபதி ஸ்டாலின் இருக்கிறார் என்ற ஆறுதல் ஏற்பட்டுள்ளது. தங்களையும் தங்கள் கூட்டணி கட்சிகளையும் வீழ்த்திய வெற்றி தளபதியாக ஸ்டாலின் வீற்றிருக்கிறார் என்றார்.  ஸ்டாலினின் வெற்றி கலைஞரைப்போல என்றும் தாங்கள் இன்னும்  உழைக்க வேண்டும்  என்பதை உணர்த்தியுள்ளது என்றும் சி.பி ராதாகிருஷ்ணன், ஸ்டாலினை புகழ்ந்து தள்ளினார்.சி.பி ராதாகிருஷணனின் பேச்சு அரசியல் நாகரீகத்தின் அடிப்படையிலானது  என்று சொல்லப்பட்டாலும் கூட ஸ்டாலினை இப்படி ஓபனாக புகழ்ந்துள்ளது பாஜக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.