ஆலயங்களைத் திறந்து வைத்து, பூஜைகள் முறையாக நடப்பது போலவே இந்த நேரத்தில் குறிப்பாக வேதங்கள், வேத மந்திரங்கள் முழங்க யாகங்கள் நடத்தப்பட வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மே 3-க்கு பிறகு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் மக்கள் வெளியே வர வேண்டும் மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்திவருகின்றன.  ஊரடங்கால், பிரசித்திப் பெற்ற கோயில்  திருவிழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா பிரச்சினையிலிருந்து மீள வசதியாக மக்கள் கோயில்களுக்கு சென்று வழிபட, கோயில்களைத் திறக்க வேண்டும் என்று பாஜக மூத்தத் தலைவர் இல. கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டில் உள்ள மக்களில் பெரும்பான்மையானோர் தெய்வ பக்தி உள்ளவர்கள். அவர்களுக்கு எந்தப் பிரச்சனை வந்தாலும் ஆண்டவனைத்தான் வேண்டுகிறார்கள். குறிப்பாக ஆலயத்துக்கு சென்று வேண்டுகிறார்கள். இப்போதைய சூழலில் ஆலயத்துக்கு கூட்டமாகச் சென்றிட வாய்ப்பு இல்லை, வசதியும் இல்லை. அது தவிர்க்கப்பட வேண்டும். ஆனால் ஆலயங்களைப் பூட்டி வைப்பது என்பது எனது மனதுக்கு நெருடலாக இருக்கிறது.
ஆலயங்களைத் திறந்து வைத்து, பூஜைகள் முறையாக நடப்பது போலவே இந்த நேரத்தில் குறிப்பாக வேதங்கள், வேத மந்திரங்கள் முழங்க யாகங்கள் நடத்தப்பட வேண்டும். தமிழில் ஆங்காங்கு கூட்டுப் பிரார்த்தனைகளும் நடத்தலாம். கூட்டுப் பிரார்த்தனை என்றால் தகுந்த சமூக இடைவெளி விட்டு 10 பேர் அமர்ந்து தேவாரம், திருமுறைகள், பாசுரங்கள் முதலியவற்றை ஓதலாம்.
நமது மந்திரங்களில், திருமுறைகளில், பாசுரங்களில், வேத மந்திரங்களில் சக்தி இருக்கிறது. இப்போது தமிழக அரசு உடனடியாக இதற்காக ஒரு ஆணை பிறப்பிக்க வேண்டும். எல்லா ஆலயங்களிலும் இது போன்ற வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். வேள்வி நடத்த வேண்டும்.” என்று இல. கணேசன் தெரிவித்துள்ளார்.