தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் இந்துக்கள் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக கோயமுத்தூரில் இந்து கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு துரித நடவடிக்கையை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தால் இந்துக்கள் மனம் புண்பட்டுள்ளது. நாங்கள் தொடக்கத்திலிருந்தே கருப்பர் கூட்டம் போன்ற நபர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்பதுதான்.” என்று தெரிவித்தார்.

 
தேர்தல் வெற்றி அதிமுகவிடம் இருந்து மாற்றுப் பாதைக்கு, அதாவது ரஜினியிடம் சென்றுவிடும் என்ற கருத்தை பாஜக கூறுவது, அதிமுகவுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த எல்.முருகன், “நிச்சயமாக தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அது போன்ற சூழல் ஏற்படும். அந்தச் சூழலை தமிழக அரசு சரி செய்ய வேண்டும். கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலை முடக்க வேண்டும். இதற்குப் பின்புலமாக இருப்பவர்கள் விசாரிக்கப்பட வேண்டும். இந்துக்கள் மனம் புண்படும்படி நடந்துக் கொண்ட அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்த எல்.முருகன், “நடிகர் ரஜினிகாந்த் கந்தசஷ்டி கவசம் விவகாரத்தில் குரல் கொடுக்கவேண்டும்” என்று தெரிவித்தார்.