மகாராஷ்டிராவில் தேர்தல் நடந்து முடிந்த பின் முதல்வர் பதவியைப் பிரித்துக் கொள்வதில் ஏற்பட்ட சிக்கலால், சிவசேனா, பாஜக கூட்டணி முறிந்தது. இதைத் தொடர்ந்து எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத நிலையில் பாஜகவுக்கு, என்சிபி கட்சியின் தலைவர் அஜித் பவார் ஆதரவு அளித்தார். இதையடுத்து, நேற்று காலை முதல்வராகத் தேவேந்திர பட்னாவிஸும், துணை முதல்வராக அஜித் பவாரும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

ஆனால், என்சிபி கட்சியின் தலைவர் சரத் பவார், பாஜகவுக்கு ஆதரவு அளிக்கவில்லை, அஜித் பவாரின் தனிப்பட்ட முடிவு என்று அறிவித்தார். அதுமட்டுமல்லாமல், சட்டப்பேரவைக் குழுத்தலைவர் பதவியிலிருந்தும் அஜித் பவாரை நீக்கினார்.

இவர்கள் இருவருக்கும் ஆளுநர் கோஷியாரி எந்த அடிப்படையில் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார் என்றும், உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆளுநரிடம் முதல்வர் பட்னாவிஸ், துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோர் அளித்த எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதங்களை நாளை வழங்க வேண்டும் என்றும், அதன்பின் உத்தரவு பிறப்பிப்போம் என்றும் தெரிவித்தனர்.

பாஜக ஆட்சி மாநிலத்தில் நீடிக்க வேண்டுமானால், பெரும்பான்மைக்கு 145 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. பாஜகவிடம் 105 எம்எல்ஏக்களும், சுயேச்சை, சிறுகட்சிகள் என சேர்த்து குறைந்தபட்சம் 119 எம்எல்ஏக்கள் தேறுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில்  தற்போது இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.