கடந்த 25 ஆண்டுகளாக திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. நாட்டின் எளிமையான முதல்வர் என பெயர் பெற்றவர் அம்மாநில முதல்வராக இருந்த மாணிக் சர்க்கார்.

அப்படிப்பட்ட எளிமையான முதல்வர் தலைமையிலான மார்க்சிஸ் ஆட்சியை வீழ்த்தி, இதுவரை அங்கு ஒரு கவுன்சிலரை கூட பெற்றிராத பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது. 

திரிபுராவில் இன்னும் பாஜக ஆட்சியே அமைக்காத நிலையில், தெற்கு திரிபுராவின் பிலோனியா பகுதியில் இருந்த லெனின் சிலை அகற்றப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் ஆட்சியில் அமைக்கப்பட்டிருந்த லெனின் சிலையை பாஜகவினர் அகற்றியுள்ளனர்.

பாஜகவின் ஆட்சியில் லெனின் சிலை எதற்கு என கேள்வி எழுப்பும் பாஜகவினர், சிலை அகற்றத்துக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். அதேநேரத்தில் இதுதான் பாஜக-ஆர்.எஸ்.எஸின் உண்மை முகம், மூன்றாம் தர அரசியல் செய்கிறது பாஜக என மார்க்சிஸ்ட் கட்சியினர் விமர்சிக்கின்றனர்.

ஆரோக்கியமான அரசியல் முன்னெடுக்கப்பட வேண்டும் என நினைக்கிற இளைஞர்கள் நிறைந்த நாட்டில், பாஜக வெற்றி பெற்ற மாநிலத்தில் ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே லெனின் சிலை அகற்றப்பட்டிருப்பது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.