மாநிலங்களவைத் தேர்தலையொட்டி குஜராத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு ரூ.15 கோடி வழங்கி தங்கள் பக்கம் இழுக்க பாஜக விலைபேசியதாக பெங்களூருவில் தங்கவைக்கப்பட்டுள்ள அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

குஜராத்தில் 3 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கு ஆகஸ்ட் 8-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது பாஜக  எம்.பி.யாக உள்ள ஸ்மிருதி இரானி, திலீப்பாய் பாண்டியா மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த  அகமது படேல் ஆகியோரது பதவிக்காலம் ஆகஸ்ட் 18-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அகமது படேல் மீண்டும் போட்டியிடுகிறார்.

அவருக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் பாஜக தற்போது களமிறங்கியுள்ளது. மூவர் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலையில் 4 பேரை  களமிறங்கி அகமது படேலுக்கு செக் வைத்துள்ளது பாஜக.

47 எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற்றால் மட்டுமே காங்கிரஸ் வேட்பாளரால் வெற்றி பெற முடியும்  என்ற நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து 6 எம்எல்ஏக்கள் விலகிவிட்டனர்.

அதில் 3 எம்எம்ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். எனவே, குஜராத் பேரவையில் காங்கிரஸ் கட்சியின் பலம் 51-ஆகக் குறைந்துவிட்டது.

இதையடுத்து  மாநிலங்களவையில் பாஜகவின் பலத்தை அதிகப்படுத்துவதற்காக காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் சம்பவங்களும், எம்எல்ஏக்கள் கடத்தப்படும் நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன. கடந்த இரண்டு நாட்களில் வகேலாவுக்கு நெருக்கமான எம்எல்ஏக்களே ராஜிநாமா செய்துள்ளனர்.

இதையடுத்து பாஜகவின் திட்டத்தை தடுக்கும் விதமாகவும் கட்சி எம்எல்ஏக்களை பாதுகாக்கும் விதமாக குஜராத்தை விட்டு 51 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூண்டோடு பெங்களூருக்கு அழைத்து வரப்பட்டு அங்குள்ள ஒரு ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.15 கோடிக்கு குதிரை பேரம்  நடத்த பாஜக முயற்சி செய்ததாக குஜராத்தின் காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்எல்ஏ ஷக்திசிங் கோஹில் தெரிவித்தார்.