மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக - சிவசேனா கூட்டணி பெரும் பான்மையைப் பெற்றாலும், ‘யாருக்கு முதலமைச்சர்  பதவி?’ என்பதில், தகராறு  நடந்து கொண்டிருக்கிறது. தனது மகன் ஆதித்யா தாக்கரேவை முதலமைச்சர்க ஆக்கியே தீருவேன் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தீவிரம் காட்டிவருகிறார். 

ஆனால் பாஜக-வோ அதனை விட்டுத்தருவதாக இல்லை.  இதனால், புதிய அரசு அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து புதிய ஆட்சி அமைக்க சிவசேனா முயன்று வருகிறது. 

இந்நிலையில், சிவசேனா தரப்பில் தானே எம்எல்ஏ-வான ஏக்நாத் ஷிண்டே-வைத் தான் முதலமைச்சராகக்க  வேண்டும் எனசிவசேனாவிலுள்ள ஒரு தரப்பினரே போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

கடந்த 2004 முதல் எம்எல்ஏ-வாக இருந்து வரும் ஏக்நாத், தானே மாவட்டத்தில் தனி செல்வாக்கு படைத்தவர் என்று கூறப்படுகிறது. சிவசேனாவில் இருந்தாலும், முதலமைச்சர்  தேவேந்திர பட்நாவிஸ் உடன்நெருக்கமானவர். பொதுப்பணித் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.

அந்த வகையில், உத்தவ்தாக்கரே, பாஜக-வுக்கு ஆதரவாக நடந்து கொள்ளாவிட்டால், ஏக்நாத் ஷிண்டே, சிவசேனாவிலிருந்து விலகி, பாஜக-வில் சேருவார் என்று செய்திகள் வெளியாயுள்ளன.

ஏக்நாத் பின்னணியில் பாஜக-வே இருக்கிறது; சிவசேனாவுக்கு தலைவலியை ஏற்படுத்தும் வகையில், பாஜகதான் அவரை வைத்துக்காய் நகர்த்துகிறது என்றும் அந்தசெய்திகள் தெரிவிக்கின்றன.