கமலஹாசன் வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக இப்போதே தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில் மக்களவை தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட மூன்று வேட்பாளர்களை பாஜகவில் இணைந்துள்ளனர்.

கமல்ஹாசன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யம்  கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கிய ஓராண்டில் நடைபெற்ற மக்களவை தேர்தலை மக்கள் நீதி மய்யம் சந்தித்தது. மக்கள் நீதி மய்யம் சார்பில் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். கமல்ஹாசன் போட்டியிடவில்லை. மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள தொகுதிகளில் மட்டும் கணிசமான வாக்குகளை பெற்றனர். இருப்பினும், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

இந்நிலையில், அவர் 2021ல் நடைபெற உள்ள சட்டமன்றத்தேர்தலுக்கு இப்போதே தயாராகி வருகிறார். சமீபத்தில் நிர்வாகிகள் 14 ஆயிரம் பேரை நியமித்தார். தேர்தலை ஒட்டி பிரச்சார வியூகர் பிரஷாந்த் கிஷோருடன் ஒப்பந்தம் போட்டு பணியாற்றி வருகிறார்.  அவரது பிறந்த நாளான 7ம் தேதி மாபெரும் விழா எடுத்து தொண்டர்களை உற்சாகப்படுத்த ஏற்பாடுகள் செய்து வந்தார்.

இந்நிலையில், மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட ராஜேந்திரன், ஸ்ரீகாருண்யா, ரவி ஆகிய மூன்று பேரும் இன்று பாஜகவில் இணைந்துள்ளனர். இதில் ராஜேந்திரன் - அரக்கோணம், ஸ்ரீகாருண்யா - கிருஷ்ணகிரி, ரவி - சிதம்பரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டனர். இது மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.