முஸ்லிம்களின் குடியிருப்புகளை புல்டோசர் மூலம் இடித்து, மதச்சார்பற்ற தன்மையை வெளிப்படுத்தி வரும் மத்திய பாஜக அரசு இந்தியாவில் பல குட்டி பாக்கிஸ்தான்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி குற்றம்சாட்டியுள்ளார். 

முஸ்லிம்களின் குடியிருப்புகளை புல்டோசர் மூலம் இடித்து, மதச்சார்பற்ற தன்மையை வெளிப்படுத்தி வரும் மத்திய பாஜக அரசு இந்தியாவில் பல குட்டி பாக்கிஸ்தான்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி குற்றம்சாட்டியுள்ளார். மத்திய பிரதேசத்தில் கார்கோன் மற்றும் டெல்லியின் ஜஹாங்கீர்புரி ஆகிய இடங்களில் சட்டவிரோத கட்டடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் எனக்கூறி முஸ்லிம்களின் குடியிருப்புகள் இடிப்பு சம்பவத்தை மேற்கோள் காட்டி அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதுகுறித்து தி பிரிண்ட் என்ற நாளிதழுக்கு பேட்டி கொடுத்துள்ளார் மெகபூபா முப்தி, சிறுபான்மையினரின் வீடுகளை மட்டும் புல்டோசர் கொண்டு இடிக்கவில்லை, இந்த நாட்டின் மதச்சார்பற்ற கலாச்சாரத்தையும் இடித்து தள்ளியுள்ளனர்.

அவர்கள் வேலைவாய்ப்பின்மை பணவீக்கம் என எல்லாத் துறைகளிலும் தோல்வி அடைந்து விட்டார்கள், இப்போது அவர்கள் கையில் இருக்கிற ஒரே ஆயுதம் இந்து-முஸ்லிம் பிரிவினைவாதம் மட்டும்தான். அவர்களுக்கு நாட்டைப் பற்றிய தொலைநோக்குப் பார்வை இருப்பதாக எனக்கு தெரியவில்லை, தனது நடவடிக்கையின் மூலம் இந்த அரசாங்கம் இந்தியாவிற்குள் பல குட்டி பாகிஸ்தான்களை உருவாக்க முயற்சிக்கிறது. தேசியவாதம் பற்றிய அவர்களின் யோசனைகளுக்கு இணங்காததற்காக மக்களை பாகிஸ்தானுக்கு செல்ல சொன்னால் அவர்கள் மினி பாகிஸ்தானை உருவாக்காமல் என்ன செய்வார்கள். பாஜக இந்த நாட்டிற்கு புதிதாக எதையும் செய்யவில்லை, அதேநேரத்தில் நாட்டை துண்டு துண்டாக பிரித்து இந்த நாட்டின் மதச்சார்பின்மையை அழிக்கிறார்கள். மொத்தத்தில் முஸ்லிம் சமூகத்தை நான் பாராட்ட வேண்டும். அவர்கள் காட்டும் பொறுமைக்காக அவர்களின் தைரியத்தை பாராட்ட வேண்டும்.

அவர்கள் பாஜகவால் தூண்டி விடப்படுகிறார்கள் இந்த ஆத்திரமூட்டும் செயல்கள் ஏதோ அடிமட்ட தொண்டர்களால் நடப்படுவதில்லை இது கட்சி மேலிடத்தில் இருந்து அரசாங்கத்திடமிருந்து வருகிற உத்தரவு. இவ்வாறு அவர் சராமரியாக விமர்சித்துள்ளார். அதாவது இந்தியாவில் அனுமன் ஜெயந்தி மற்றும் ராம நவமி அன்று டெல்லி ராஜஸ்தான் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்து அமைப்புகள் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இந்து-முஸ்லிம் கலவரம் வெடித்தது. கலவரம் வெடித்த பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் என்ற பெயரில் மத்திய அரசும், அந்தந்த மாநில அரசுகளும் குடியிருப்புகளை புல்டோசர்களை கொண்டு இடித்து தள்ளியுள்ளன. முஸ்லீம்களை குறிவைத்தே இந்த இடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்த நடவடிக்கையை காங்கிரஸ் ஆம் ஆத்மி கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான பயங்கரவாத சின்னமாக புல்டோசர் மாறியுள்ளது என்றும் மெகபூபா முப்தி கூறியுள்ளார்.