பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அக்கட்சியின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சீனாவின் பிறப்பிடமான கொரோனா வைரஸ் இந்தியாவில் ருத்தரதாண்டவம் ஆடி வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டு  பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டு வந்துள்ளனர். சில அமைச்சர்கள், நாடாளுமன்ற  உறுப்பினர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களை ஒப்பிடும் போது தற்போது கொரோனா பரவல் குறைவாகவே இருக்கிறது. இருப்பினும், கொரோனா 2ம் கட்ட அலையில் இருப்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் மக்கள் செயல்பட வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், தேசிய பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தமக்கு கொரோனா ஆரம்ப அறிகுறிகள் தெரிந்தததாகவும், அதன் பிறகு பரிசோதனை செய்ததில் தொற்று உறுதிப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். தமது உடல் நிலை நன்றாக இருப்பதாகவும், டாக்டர்கள் கூறியதன் பேரில் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு எல்லா அறிவுரைகளையும் பின்பற்றிவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த சில தினங்களில் தம்முடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு பரிசோதனை செய்துகொள்ளும்படியும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.