கர்நாடகவைப் போல மகாராஷ்டிராவிலும் அவசரப்பட்டு ஆட்சி அமைத்துவிட்டு கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி உள்ளது பாஜக.
 கர்நாடகாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. ஆனால், மெஜாரிட்டியைவிட 7 சீட்டுகள் குறைவாகப் பெற்றிருந்த பாஜக, அவசரம் அவசரமாகப் பதவியேற்றது. காங்கிரஸ், ஜேடிஎஸ் கூட்டணிக்கு மெஜாரிட்டி இருப்பதாக அறிவித்த நிலையில் பதவியேற்பு நடைபெற்றது. இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு சென்றது. உடனே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. சட்டப்பேரவையைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதற்கு முன்பாகவே தனது பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்துவிட்டு சென்றார்.


தற்போது மகாராஷ்டிராவிலும் அதே கதைதான் நடந்தேறியிருக்கிறது. முதலில் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தபோது ஆட்சி அமைக்க பாஜக விரும்பவில்லை என்று கூறிவிட்டது. ஆனால், சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சி அமைக்க முற்பட்ட வேளையில், அவசரமாக பாஜக ஆட்சி அமைத்தது. என்சிபியைச் சேர்ந்த அஜித் பவார் ஆதரவில் ஆட்சி அமைப்பதாக பாஜக அறிவித்தது.
கர்நாடகாவிலாவது மெஜாரிட்டிக்கு 7 இடங்கள்தான் குறைவாக இருந்தன. ஆனால், மகாராஷ்டிராவில் 40 இடங்கள் குறைவாக இருந்தபோது ஆட்சியில் பாஜக உட்கார்ந்தது. அஜித் பவார் எத்தனை எம்.எல்.ஏ.க்களும் ஆதரவளிக்க வந்தார் என்பது தெரியாமலேயே இந்த ஆட்சி அமைந்ததுதான் கேலிக்கூத்தாகிப்போனது. இப்போது உச்ச நீதிமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்ட நிலையில், சபைக்கே வராமல் தனது பதவியை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் ராஜினாமா செய்துவிட்டார். 


இதை வைத்து பாஜகவை பொதுவெளியிலும் சமூக ஊடங்களிலும் கேலியும் கிண்டலும் செய்துவருகிறார்கள். இரு மாநிலங்களிலும் பாஜக அவசரப்பட்டு ஆட்சியமைத்து, ஒரு சில நாட்களிலே ஆட்சியை இழந்துள்ளதால், பாஜக கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி உள்ளது.