தமிழக முதல்வரும் சில அமைச்சர்களும் வெளிநாடுகளில் வலம் வருகிறார்கள். அவர்கள் செம்ம ஜாலியாக சுற்றுவதாக ஸ்டாலின் போட்டுத் தாக்குகிறார். ஆனால் உண்மை நிலை அப்படியில்லை. மிகப்பெரிய மன உளைச்சலுடன்தான் எடப்பாடியார் வெளிநாட்டிற்கு பறந்திருக்கிறார், ஆட்சியை கலைத்துவிடும் முடிவுக்கு பா.ஜ.க. வந்துவிட்டது! என்று அதிகார மையங்களில் இருந்தே கதகதப்பான தகவல்கள் கசிய துவங்கியுள்ளன. 

தங்கள் கட்சியின் தமிழக தலைவராக இருந்த தமிழிசையை தெலுங்கானா கவர்னராக்கிவிட்டு, புதிய தலைவரை நியமிக்கிறது பா.ஜ.க. தமிழிசையின் நீட்டிக்கப்பட்ட பதவிகாலம் நிறைவை நெருங்கிவிட்டது. ஆனால் அதற்குள் புதிய தலைவரை உருவாக்கிட வேண்டிய அவசியமில்லை. ஆனால் அதை செய்கிறது பா.ஜ.க. மேலிடம். காரணம்?...தமிழகத்தில் ஆட்சி கலைப்புக்கு நாள் குறித்துவிட்டதால்தான்! என்கிறார்கள். 

தமிழிசை மாற்றம் உள்ளிட்ட விபரங்கள் ஃபாரீன் டூர் கிளம்பும் முன்பே தமிழக முதல்வருக்கு சொல்லப்பட்டு விட்டதாம். விபரமறிந்தவர்கள் நம்மிடம் இது பற்றி விரிவாக பேசுகையில் “தமிழக முதல்வர் எடப்பாடியாரிடம் அமித்ஷா சார்பாக சிலர் தெளிவா சில விஷயங்களை விளக்கியிருக்காங்க. ‘வெளிநாட்டுல அமைதியான சூழல்ல நல்லா யோசியுங்க. எப்பவோ முடிஞ்சிருக்க வேண்டிய உங்க ஆட்சியை இன்று வரை காப்பாத்தியிருக்கோம். அதனால இன்னும் ஆறு மாசத்துல ஆட்சியை கலைச்சுடலாம்.  இயல்பாக 2021 மே மாதமே தேர்தல் வரட்டும், ஆனால் அதற்குள் இங்கே கவர்னர் ஆட்சியை அமைச்சு, தமிழக மக்கள் எங்களை விரும்புற மாதிரியான சில திட்டங்களை கொண்டு வந்து, நிர்வாகத்தை பண்ண இருக்கிறோம் நாங்க. 

கவர்னர் நிர்வாகம் இருக்கிறப்ப, மத்திய அரசு நேரடியா தலையிட்டு பல சிறப்பான திட்டங்களை கொண்டு வரும். இதன் மூலமா பா.ஜ.க. அரசு அமைந்தால் தமிழ்நாடு நல்லா இருக்கும்! அப்படிங்கிற கான்செப்டை மக்கள் மனசுல உருவாக்கணும். ஒரு வருட காலத்துக்குள் மக்கள் மனதில் நல்ல பெயர் கிடைச்சுட்டா, அதன் பிறகு எங்க கூட்டணியில்  பிரதானமா உங்களையும் இணைச்சு, தேர்தலை சந்திப்போம். நிச்சயம் வெல்வோம், ஆட்சி அமைப்போம். இல்லை, ஐந்து வருஷம் ஆட்சி நடக்கட்டும்!ன்னு நீங்க நினைச்சால் அடுத்து ரொம்ப எளிமையா தி.மு.க. வந்து உட்கார்ந்துடும். அதுக்கு பிறகு யாருக்கும் எந்த பலனுமில்லை. உங்களுக்கு எப்படியோ தெரியாது, ஆனால் வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. ஆழமா கால் பதிச்சே ஆகணும். 

ஆட்சியில் பங்குங்கிறதில் சமரசமே இல்லை. முதல்வர் பதவி லட்சியம், துணை முதல்வர் பதவி நிச்சயம். இதுதான் பிளான்!’ அப்படின்னு சொல்லியிருக்காங்க. ஆட்சி பற்றிய இந்த வருத்தமும், ஏதோ பா.ஜ.க.வின் கூட்டணியில் நாமளும் ஒரு கட்சியா சேர்க்கப்படுவோம் அப்படிங்கிற அளவுக்கு திட்டம் தீட்டப்படுதேங்கிற கவலையும் சேர்ந்து முதல்வரை அழுத்துது. அதனால்தான் ஃபாரீன் டூரில் அவருடைய முகத்தில் எந்த சந்தோஷமும் இல்லை. நல்லா கவனியுங்க.” என்றார்கள். 

இதில் ஹைலைட் என்னவென்றால், பா.ஜ.க.வின் இந்த ’ஆட்சி கலைப்பு, கவர்னர் நிர்வாகம்’ மூவ் முழுக்க முழுக்க  ஸ்டாலினுக்கு தெரியுமாம்.