கேரளாவில் நடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான கூட்டணி முன்னிலையில் உள்ளது. மொத்தமுள்ள 6 மாநகராட்சிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடதுசாரிகள் கூட்டணி 4 இடங்களையும் காங்கிரஸ் கூட்டணி 2 இடங்களையும் கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. 

கேரள மாநிலத்தில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சி  தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் பாரதிய ஜனதா, காங்கிரஸ், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி என  மும்முனைபோட்டி நிலவியது. மொத்தம் 941 கிராம ஊராட்சி, 152 ஊராட்சி ஒன்றியம், 14 மாவட்ட ஊராட்சி, 86 நகராட்சி, 6 மாநகராட்சி என 1199 உள்ளாட்சி  அமைப்புகளின் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கான வாக்குபதிவு கடந்த 8, 10, 14 ஆகிய தேதி களில் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. இதில் சராசரியாக 77 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. இந்த வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. 

இதில் வெற்றிபெற்று புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பிரதிநிதிகள் டிசம்பர் 21ஆம் தேதி பதவியேற்றுக் கொள்வார்கள் என  மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு துவங்கியது, முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணபட்டது, அதில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி முன்னிலை பெற்றது. அதைத்தொடர்ந்து மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. அதன் விவரம் பின்வருமாறு: 

மாநகராட்சிகள்:

மொத்தமுள்ள 6 மாநகராட்சிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி 4 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி இரண்டு இடங்களிலும் முன்னிலையில்  உள்ளன.

நகராட்சிகள்:

மொத்தம் 86 நகராட்சிகள் உள்ள நிலையில், கம்யூ., தலைமையிலான இடதுசாரிகள் கூட்டணி 36 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 37 இடங்களையும், பாஜக 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

மாவட்ட ஊராட்சிகள்:

மொத்தம் 14 மாவட்ட ஊராட்சிகள் உள்ள நிலையில், இடதுசாரிகள் கூட்டணி 10 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

ஊராட்சி ஒன்றியங்கள்:

மொத்தம்  உள்ள 152 ஊராட்சி ஒன்றியங்களில் இடதுசாரிகள் கூட்டணி 98 இடங்களையும்,  காங்கிரஸ் கூட்டணி 53 இடங்களையும், பாஜக 1 இடத்திலும் முன்னிலையில் உள்ளது. 

கிராம ஊராட்சிகள்:

மொத்தம் 941 கிராம ஊராட்சிகள் உள்ள நிலையில் இடதுசாரிகள் கூட்டணி 562 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 354 இடங்களிலும், பாஜக வெறும் 25 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.