மத்தியில் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது. 

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்த மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாஜக ஆதிக்கம் செலுத்திவருகிறது. பாஜகவின் மீது எதிர்க்கட்சிகள் ஏராளமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் பாஜகவை அசைக்க முடியவில்லை. 

பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, இனவாதம் என பாஜக மீது ஏராளமான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் மற்ற எதிர்க்கட்சிகளும் வாக்கு சேகரித்தன. 

ஆனால் மக்கள் பாஜகவையே மீண்டும் அங்கீகரித்து மீண்டும் ஆட்சி பொறுப்பை கொடுக்க முடிவெடுத்துள்ளனர். வேலூரை தவிர நடந்த 542 தொகுதிகளில் 340க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. வெறும் 90 தொகுதிகளில் தான் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்கிறது. மற்ற கட்சிகள் 113 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. 

கடந்த சில மாதங்களுக்கு முன் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக தோல்வியடைந்து ஆட்சியை இழந்தது. அந்த மாநிலங்களில் பாஜகவை ஆட்சியில் இருந்து இறக்கிவிட்டு காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. 

அதனால் பாஜக அந்த மாநிலங்களில் பலமிழந்துவிட்டதாகவும் காங்கிரஸ் கட்சியின் கை ஓங்கியிருப்பது போன்ற தோற்றமும் உருவானது. ஆனால் வெகு சில மாதங்களிலேயே எதிர்பார்த்திராத மாற்றம் நடந்துள்ளது. அண்மையில் காங்கிரஸிடம் தோற்று ஆட்சியை இழந்த பாஜக, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களிலும் மீண்டும் விஸ்வரூப வெற்றி பெற்று அந்த மாநிலங்களை தங்களது கோட்டையாக்கியுள்ளது பாஜக. 

மத்திய பிரதேசத்தில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. அந்த மாநிலத்தில் உள்ள 29 மக்களவை தொகுதிகளில் பாஜக 28ல் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் வெறும் ஒரு தொகுதியில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. 

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 25 தொகுதிகளில் 25லுமே பாஜக தான் முன்னிலை வகிக்கிறது. சத்தீஸ்கரில் உள்ள 11 தொகுதிகளில் 9ல் பாஜகவும் 2ல் காங்கிரஸும் முன்னிலை வகிக்கின்றன. 

அண்மையில் காங்கிரஸிடம் இழந்த மூன்று மாநிலங்களிலுமே மீண்டும் கொடி நாட்டியுள்ள பாஜக. அதேபோல பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றும் காங்கிரஸ் - ஜேடிஎஸ் கூட்டணியால் ஆட்சியமைக்க முடியாமல் இழந்த கர்நாடகாவிலும் 28 தொகுதிகளில் 24ல் பாஜக முன்னிலை வகிக்கிறது.