நீட் தேர்வு விலக்கு தொடர்பாக தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றிய 2 மசோதாக்களை 2 ஆண்டுகளுக்கு முன்பே குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்டார் என்று தமிழக பாஜக மா நில செயலாளர் கே.டி.ராகவன் தெரிவித்துள்ளார்.
 நீட் தேர்வில்  தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவை  இரண்டு மசோதாக்களை நிறைவேற்றி ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது. ஆனால், அந்த மசோதாக்களை குடியரசுத் தலைவர் கிடப்பில் போட்டுவிட்டதாக தமிழக அரசியல் கட்சிகள் நினைத்துவந்தன. இந்நிலையில் நீட் தேர்வு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, தமிழக அரசின் அவசர சட்டத்தை நிராகரித்துவிட்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


27 மாதங்கள் கழித்து இந்தத் தகவல் வெளியிடப்பட்டதை தமிழக அரசியல் கட்சிகள் கண்டித்தன. இதுதொடர்பாக மத்திய அரசை கண்டித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழக அரசை வலியுறுத்தினார். இதன் காரணமாக நீட் விலக்கு தொடர்பான மசோதாக்கள் தமிழகத்தில் பேசுபொருளாயின.


இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தமிழக அரசின் மசோதாக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்டதாக தமிழக பாஜக செயலாளர் கே.டி.ராகவன் தனது முகநூல் பக்கத்தில்  ஆதாரத்துடன் பதிவு ஒன்றை இன்று வெளியிட்டார். அதில், “மத்திய அரசு 22.09.2017 அன்றே தமிழக சட்டதுறை செயலாலருக்கு கடிதம் மூலம் தமிழக அரசின் மசோதாவை ஜனாதிபதி நிராகரித்தது தொடர்பாக கடிதம் அனுப்பியுள்ளது. ஆனால், மத்திய அரசு தற்போதுதான் நீதிமன்றத்தில் 24 மாதங்களுக்கு பிறகு சொல்வதாக பேசுவது முறையல்ல. நீட் தேவை என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு. அதை கொண்டு வந்த காங்கிரஸ் - திமுகதான் இரட்டை வேடம் போடுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழக சட்டத் துறை செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் நகலையும் கே.டி.ராகவன் வெளியிட்டுள்ளார். கே.டி.ராகவனின் இந்த பதிவின் மூலம் மசோதா நிராகரிக்கப்பட்டது 2 ஆண்டுகளுக்கு முன்பே தெரியும் என்பது தெளிவாகியுள்ளது.