பாஜக நடத்தும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வார் என்றும் முடிந்தால், திமுக தடுத்துப் பார்க்கட்டும் என்றும் ஹெச்.ராஜா சவால் விடுத்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், இரு தினங்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொண்டார். அதற்கு அப்பகுதி திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டினர். இதனைத் தொடர்ந்து கருப்புக்கொடி காட்டிய 192 திமுகவினரை போலீசார் கைது செய்தனர். அவர்களது கைதை கண்டித்து நேற்று ஆளுநர் மாளிகை அருகே திமுகவினர், மு.க.ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடத்தினர். அப்போது, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

அப்போது பேசிய ஸ்டாலின், கைதானவர்களை விடுதலை செய்யுங்கள் என்று நாங்கள் கெஞ்சவில்லை. மறைந்த நேருவுக்கே கருப்புக்கொடி காட்டி திமுக வரலாறு படைத்துள்ளது. இன்று ஏக சக்ரவர்த்தியாக இருக்கும் மோடியை, சாலை வழிப்பயணமாக வர முடியாத அளவிற்கு, கருப்புக்கொடி காட்டி வரலாறு படைத்தோம்.

ஜனநாயகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட போராட்டத்தைதான் செய்து வருகிறோம். மாநில உரிமைகளைப் பறிக்கக் கூடிய வகையில் செயல்படும் ஆளுநர் உடனே ராஜினாமா செய்ய வேண்டும். எங்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். மாலையில் விட்டு விட்டால் அடுத்தக்கட்ட போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம் என்று கூறியிருந்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த பிரச்சனையின்போது, சென்னை வந்த பிரதமர் மோடிக்கு எதிராக, தமிழக மக்கள் #GoBackModi என்று ஹாஷ்டேக் செய்தும், வீடுகளில் கருப்புக்கொடி கட்டியும், கருப்பு பலூன்களைப் பறக்கவிட்டும் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். இதன் காரணமாக பிரதமர் மோடி, சாலை வழி பயணத்தை தவிர்த்துவிடடு, ஆகாய மார்கமாகவே அனைத்து இடங்களுக்கும் சென்றார்.

திமுகவுக்கு சவால்விடும் வகையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது டுவிட்டரில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாங்கள் நேருவுக்கும், இந்திரா காந்தி அவர்களுக்கும் கருப்புக்கொடி காட்டியுள்ளோம் என்று ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார். இவர்கள் இந்திராவைத் தாக்கி இரத்தம் வந்தபோது எவ்வளவு அருவருக்கத்தக்க வகையில் கருணாநிதி கூறினார் என்றும் எங்களுக்குத் தெரியும்.

 

ஆனால், பிரதமர் மோடி அவர்களுக்கு எதிராக, தமிழக மக்கள் கருப்பு பலூன் விட்டதால் பிரதமர் ரோட்டில் செல்ல பயந்து ஆகாய மார்க்கமாக சென்றார் என்று மார்தட்டுவது சிறுபிள்ளைத்தனம். பிரதமர் பாஜகவின் பொது கூட்டத்தில் கலந்துகொள்வார்கள். முடிந்தால் திமுக தடுத்துப் பார்க்கட்டும். ஒப்பன் மவனே சிங்கம்டா... வேலை இங்கு வேண்டாம் என்று அதில் கூறியுள்ளார்.