bjp national secretary h raja arrested
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு கண்டனம் தெரிவித்து நாகையில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.
அம்பேத்கர் நினைவுநாள் மற்றும் பாபர் மசூதி இடிப்புதினத்தை ஒட்டி நடந்த கூட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அயோத்தியில் ராமர் கோவில் இருந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டதாகவும் அதனால்தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டதாகவும் சங் பரிவார் அமைப்புகள் கூறுகின்றன. அப்படி பார்த்தால், பெரும்பாலான புத்த விகார்களையும் சமண கோவில்களையும் இடித்துத்தான் இந்து கோவில்கள் கட்டப்பட்டுள்ளன என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அப்படி பார்த்தால், இந்து கோவில்களை இடித்துவிட்டு புத்த விகார்கள் கட்ட வேண்டும் என்று கூறமுடியுமா? என பேசியிருந்தார்.
ஆனால், திருமாவளவன் இந்து கோவில்களை இடிக்கவேண்டும் என கூறிவிட்டார் என்றுகூறி பாஜகவினரும் இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட சில அமைப்புகளும் திருமாவளவனுக்கு கடும் கண்டனங்கள் தெரிவித்தன. மத நல்லிணக்கத்திற்கு எதிராக பேசிய திருமாவளவனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வலியுறுத்தியிருந்தார்.
பாஜகவுக்கும் விடுதலை சிறுத்தைகளுக்கும் இடையே பல்வேறு விஷயங்களில் தொடர்ச்சியாக மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இந்நிலையில், திருமாவளவனைக் கண்டித்து நாகையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்த பாஜகவினர் முயன்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்ற அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜாவை வாஞ்சூர் அருகே தடுத்து நிறுத்திய போலீசார், அவரை கைது செய்தனர். எச்.ராஜாவை வரவேற்க இருந்த பாஜகவினர் 70 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
