இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பு பணிகளையும் சிகிச்சை பணிகளையும் தீவிரமாக மேற்கொண்டுவருகின்றன. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுடன் கொள்கை ரீதியாகவும், எதிர்க்கட்சி என்ற ரீதியிலும் கருத்து முரண் கொண்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் கூட, இந்த இக்கட்டான சூழலில் பெரியளவில் மத்திய அரசை விமர்சிப்பதில்லை. 

ஆனால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மட்டும், தொடர்ச்சியாக மத்திய அரசை கடுமையாக சாடிவருகிறார். கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை பணிகளை மாநிலங்கள் மேற்கொள்வதை ஆராய்வதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய குழு அனுப்பிவைக்கப்பட்டது. தமிழ்நாட்டிற்கு கூட மத்திய குழு வந்து ஆய்வு செய்தது. அந்தவகையில் தான் மேற்கு வங்கத்திற்கும் அனுப்பப்பட்டது மத்திய குழு. ஆனால் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார் மம்தா பானர்ஜி. 

மேலும் மத்திய அரசு, கொரோனா ஏற்படுத்தியுள்ள இந்த இக்கட்டான சூழலிலும் அரசியல் செய்வதாக குற்றம்சாட்டிவந்த மம்தா பானர்ஜி, அந்த குற்றச்சாட்டை பிரதமர் மோடியுடனான ஆலோசனைக் கூட்டத்தின் போது அவரிடமே தெரிவித்தார். மேலும், இக்கட்டான சூழலை எதிர்கொண்டிருக்கும் நிலையில், மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் ஒரே மாதிரி நடத்த வேண்டுமே தவிர, பாரபட்சம் காட்டக்கூடாது என்ற குற்றச்சாட்டையும் பிரதமர் மோடியிடமே முன்வைத்தார். 

கொரோனாவுக்கு எதிரான போரில் நாடே ஈடுபட்டுள்ள நிலையில், கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்வதில் காட்டும் ஆர்வத்தைவிட மத்திய அரசை குற்றம்சாட்டுவதிலேயே மம்தா பானர்ஜி அதிக ஈடுபாடு காட்டிவந்த நிலையில், மம்தா பானர்ஜியை கடுமையாக விளாசியுள்ளார் பாஜக தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா. 

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், கொரோனா ஏற்படுத்தியுள்ள இந்த நெருக்கடியான சூழலில் நாங்கள்(பாஜக) அரசியல் செய்யவில்லை. மம்தா பானர்ஜி கொரோனா தடுப்பு பணிகளை திறம்பட மேற்கொள்ளாமல், கொரோனாவுக்கு எதிரான போரில் தோற்றுவிட்டார். கொரோனா நோயாளிகளை சிகிச்சையளித்து காப்பாற்றுவதில் கவனம் செலுத்தாமல், கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டுவதில் தான் மம்தா பானர்ஜி குறியாக இருக்கிறார். உண்மையை வெளிப்படுத்தும் அதிகாரிகளை மம்தா மாற்றுகிறார். அவர் முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் பதவிகளிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும்.

கொரோனா தடுப்பில் தோல்வியுற்றதை ஒப்புக்கொள்ளாமல், மத்திய அரசை விமர்சித்து திசைதிருப்ப பார்க்கிறார். ஆனால் அவரது எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. அடுத்த ஆண்டு மேற்கு வங்கத்தில் நடக்கும் சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி தோற்பதை யாராலும் தடுக்க முடியாது. பிரஷாந்த் கிஷோர் உதவி செய்தாலும் திரிணாமூல் காங்கிரஸ் அடுத்த ஆண்டு மேற்கு வங்கத்தில் ஜெயிக்காது. கொரோனா மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களை சரியாக கையாளாத திரிணாமூல் காங்கிரஸ், 2021 சட்டமன்ற தேர்தலில் அதற்கான விலையை கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.