கர்நாடக எம்.பி.க்களுக்கு விலை உயர்ந்த ஐ போனை பரிசாக கொடுத்து பொது மக்களின் பணத்தை முதலமைச்சர் குமாரசாமி வீணடிப்பதாக கர்நாடக மாநில பாஜக எம்.பி. ராஜிவ் சந்திரசேகர் குற்றம்சாட்டியுள்ளார்.

காவிரி விவகாரம் தொடர்பாக பேசுவதற்கு நாளை அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தை அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி கூட்டியுள்ளார். இதற்காக அவர் எம்.பி.க்களுக்கு 90 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஐ போன் டென் பாக்ஸ் மற்றும் மூச்சீஸ் சிறுவனத்தின் 4 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லெதர் பேக்கையும் பரிசாக அளித்துள்ளார்.

இதற்கு  கர்நாடக மாநில பாஜக எம்.பி. ராஜிவ் சந்திரசேகர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்  காவிரி விவகாரத்தில் நாளை அனைத்து கட்சி எம்பிக்கள் கூட்டத்தை குமாரசாமி கூட்டுவதற்கு நன்றி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அதற்காக எம்.பி.க்களுக்கு ஏன் விலை உயர்ந்த ஐபோன் டென்னை பரிசளித்து மக்களின் வரிப்பணத்தை குமாரசாமி அரசு வீணடிக்க வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதே போன்று மற்ற பாஜக எம்பிக்களும் குமாரசாமி மீது குற்றம்சாட்டியுள்ளதுடன், பரிசளிக்கப்பட்ட ஐபோனை திருப்பி அளிக்க முடிவு செய்துள்ளனர்.