மத்திய பிரதேசத்தில், சுங்கச்சாவடி ஊழியர் ஒருவரை, தமது ஆதரவாளர்களுடன் பாஜக எம்.பி. ஒருவர் தாக்கியுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவி வருகிறது.

மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் பாஜக தலைவராகவும், தற்போது எம்.பியுமாக இருப்பவர் நந்தகுமார். மத்தியபிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை நந்தகுமார் சிங் சவுகான் செய்து வருகிறார்.

பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷாவின் பிரச்சார வருகைக்கான முன்னேற்பாடுகளை செய்து வரும் அவர், குணா - சிவ்புரி சாலையில் உள்ள சுங்கச்சாவடியை தனது ஆதரவாளர்களுடன் கடக்க முற்பட்டார். அப்போது சுங்கச்சாவடி ஊழியர், அவரிடம் அடையாள அட்டை கோரியதாக தெரிகிறது.

தன்னிடம் அடையாள அட்டை கேட்டதால் ஆத்திரமடைந்த நந்தகுமார், தமது ஆதரவாளர்களுடன் சேர்ந்து சுங்கச்சாவடி ஊழியரைத் தாக்கியுள்ளனர். எம்.பி. நந்தகுமார், சுங்கச்சாவடி ஊழியரை தாக்கும் இந்த வீடியோ காட்சி, சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. 

அடையாள அட்டை கேட்டதற்காக, சுங்கச்சாவடி ஊழியரை தாக்கும் பாஜக எம்.பி. மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்குமா? என்பதை மக்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.