“நேரு - காந்தி குடும்பத்தினரை காங்கிரஸ் தலைமையில் இருந்து வெளியேற்ற ஆர்எஸ்எஸ், பாஜ ஏன் விரும்புகிறது என்றால், அவர்களின் தலைமை இல்லாமல் போனால் காங்கிரசும் ஜனதா கட்சி போன்று ஆகிவிடும்."
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி குறித்து காங்கிரஸ் கட்சியில் சலசலப்புகள் குறையாத நிலையில், ஜி-23 தலைவர்கள் கூட்டம் டெல்லியில் இன்று நடக்கிறது.
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்த நிலையில், காங்கிரஸ் கட்சியிலிருந்து ராஜீவ் காந்தி குடும்பத்தினர் விலகி இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் சிலர் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டிக் கூட்டம் இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நிலையில், காங்கிரஸ் தலைவராக சோனியாவே நீட்டிப்பார் என்றும் ராகுல் காந்தி பதவியை ஏற்க வேண்டும் என்று மட்டுமே கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் உள்ள ஜி-23 தலைவர்களில் ஒருவரான கபில் சிபல் காரிய கமிட்டி கூட்டத்தில் கூறுகையில், “‘காங்கிரஸ் தலைமையில் இருந்து காந்தி குடும்பத்தினர் ஒதுங்க வேண்டும். மற்ற தலைவர்களுக்கு தலைமை தாங்கி வழி நடத்த வாய்ப்பை அளிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி அனைவருக்குமானதாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். ஆனால், சிலர் அது குடும்பத்துக்கானது என்று நினைக்கிறார்கள்” என்று தெரிவித்திருந்தார். கபில் சிபலின் இந்தக் கருத்து காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

கபில் சிபலின் இந்தப் பேச்சுக்கு மக்களவை காங்கிரஸ் கொறடா மாணிக்கம் தாகூர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருந்த மாணிக்கம் தாகூர், “நேரு - காந்தி குடும்பத்தினரை காங்கிரஸ் தலைமையில் இருந்து வெளியேற்ற ஆர்எஸ்எஸ், பாஜ ஏன் விரும்புகிறது என்றால், அவர்களின் தலைமை இல்லாமல் போனால் காங்கிரசும் ஜனதா கட்சி போன்று ஆகிவிடும். அதன் பிறகு, காங்கிரசையும் இந்தியாவின் அடையாளத்தையும் அழிப்பது அவர்களுக்கு எளிது. இது கபில் சிபலுக்கு தெரியும். ஆனால், இது தெரிந்தும் காந்தி குடும்பத்தை பற்றி விமர்சிக்கும் போது அவர் ஏன் ஆர்எஸ்எஸ், பாஜ.வினரை போல பேசுகிறார்?’ என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் காந்தி, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி உள்ளிட்ட முன்னாள் தலைவர்களின் வீடியோவை வெளியிட்டு, ‘தொடர்ந்து போராடுவோம், மீண்டு வருவோம், உங்களுக்காக குரல் கொடுப்போம்’’ என்று பதிவிடப்பட்டுள்ளது. மேலும் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைத் தொடர்ந்து 5 மாநில கட்சி தலைவர்களை ராஜினாமா செய்யுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி உத்தரவிட்டிருந்தார். இதற்கிடையே ஜி-23 என்ற காங்கிரஸ் அதிருப்தி தலைவர்களின் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.
காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் இல்லத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் உள்ளவர்கள் பங்கேற்கலாம் என்று அழைப்பு விடுத்துள்ளனர். ஐந்து மாநில தேர்தலில் நான்கில் வெற்றி பெற்ற பாஜக, அடுத்துகட்டமாக குஜராத்தில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டது. ஆனால், காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றுவதை விட்டுவிட்டு, மாறாக செயல்படத் தொடங்கி இருக்கிறார்கள்.
