பாஜக வாசிங் மெஷின் தான்; எங்களிடம் வருபவர்களை தூய்மையாக மாற்றிவிடுவோம் - வானதி சீனிவாசன்
பாஜகவை, வாசிங் மெஷின், கங்கை என்று கூறுகிறார்கள். ஆம் எங்களிடம் வருபவர்களை நாங்கள் தூய்மையாக மாற்றிவிடுவோம் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை சுந்தராபுரம் பகுதியில் பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “கர்நாடகா சென்றிருக்கும் முதல்வர் ஸ்டாலின் மேகதாது பகுதியில் அணை கட்டும் கர்நாடகா அரசின் முயற்சிக்கு இதுவரை எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பிரதமர் மோடி எதிர்ப்பை மட்டும் கவனத்தில் கொண்டு, சுயநல அரசியலுக்காக விவசாயிகள் நலனை, மாநிலத்தின் உரிமையை முதல்வர் காவு கொடுக்கிறார்.
காவிரி நதி நீர் பிரச்சினை உயிர் நாடி பிரச்சினையாக இருக்கிறது. இப்பிரச்சினையில் தமிழக உரிமையை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு நடுநிலை வகித்த காரணத்தினால் தான் காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. ஆண்டுதோறும் காலதாமதம் இல்லாமல் மேட்டூர் அணை திறக்கப்படுகிறதென்றால் அதற்கான பெருமை பாஜக, மோடியையே சாரும்.
ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் மோடியும், அமித்ஷாவும் கம்பி எண்ணுவார்கள் - ஈவிகேஎஸ் கருத்து
இரு மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சினைகளில் பொதுவான, நியாயமான வழியில் பாஜக நிற்கிறது. மேகதாது அணை கட்ட வேண்டுமென கர்நாடகா பாஜக அரசு சொன்ன போது கூட, நடுவர் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டுமென மத்திய பாஜக அரசு தமிழக விவசாயிகள் நியாயத்தின் பக்கம் நின்றது. கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு மேகதாது அணை கட்டுவதில் உறுதியாக உள்ளது.
கருணாநிதி காலத்தில் காவிரி பிரச்சினையில் தமிழக உரிமையை விட்டு கொடுத்தீர்கள். அதனால் புதிய அணைகள் வந்ததால்தான் பிரச்சினைகள் வந்தது. அப்பிரச்சனைகளுக்கு தீர்வை தந்தவர் பிரதமர் மோடி. மக்கள் நலனை விட, காவிரி நீராதார உரிமை தாண்டி. விவசாயிகள் நலன் தாண்டி, மாநிலத்தின் உரிமையை விட மோடி எதிர்ப்பு அரசியல் தான் முதல்வருக்கு முக்கியமாக உள்ளது.
திமுக அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் எந்த காலத்தில் நடந்தது? நீதிமன்ற உத்தரவினால் துறைகள் நடவடிக்கை எடுத்தால் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்பதா? இது தான் சட்டத்திற்கு கொடுக்கும் மரியாதையா? விளையாட்டுத்துறை அமைச்சர் விளையாட்டு தானமாக பேசுகிறார். நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தான் சோதனைகள் மற்றும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. திராவிட மாடல் ஆட்சியில் காலையில் குடிப்பவர்கள் குடிகாரர்கள் என அழைக்கப்பட மாட்டார்கள். திமுக அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளை புதிதாக கற்பனையாக யாரும் சொல்லவில்லை. முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களை நியமிக்கும் போது, அவர்களின் குற்றப்பின்னணி, வழக்குகள் இருப்பதைப் பார்த்து சரியான பின்னணி கொண்டவர்களை நியமிக்க வேண்டும்.
திமுக உள்ளிட்ட ஊழல் கட்சிகளிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - பிரதமர் மோடி
ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேசியதை திரித்து போட்டு விட்டார்கள். தேர்தல் கூட்டணி குறித்து தேசிய தலைமை தான் முடிவு எடுக்கும். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டம் புதிதாக நடக்கவில்லை. வழக்கமாக நடக்கும் ஒன்று தான். பாமக கூட்டணியில் இருக்கிறார்களா என்பது அந்த கூட்டத்தில் தெரியும். எதிர்கட்சி எம்.எல்.ஏ.விடம் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென மக்கள் நீதி மய்யத்தினர் கேட்கின்றனர்.
பாஜகவை வாசிங் மெசின் என்றார்கள். இப்போது பாஜகவை கங்கை நதி என்கிறார்கள். கங்கை நதி புனிதம் என்பதை ஏற்றுக்கொண்டதில் சந்தோசம் அடைகிறேன். அவர்களுக்கு எதுவும் புனிதம் கிடையாது. பாஜகவை வாசிங் மெசின் என்றால், வாசிங் மெசின் தான். எங்களிடம் வந்தால் அவர்களை தூய்மையாக மாற்றி விடுவோம். கங்கை நதி என்றால், கங்கை நதிதான். எங்களிடம் வந்ததால் எல்லாத்தையும் புனிதமாக மாற்றும் சக்தி எங்களிடம் உள்ளது. ஏனெனில் கட்சி நேர்மை, அறம், சட்டம் அடிப்படையில் செய்கிறது. எங்களிடம் யார் வந்தாலும் நல்லவர்களாக மாறி விடுவார்கள்.
சட்டமன்ற உறுப்பினராக என்னென்ன செய்ய வேண்டுமோ, அத்தனையும் செய்து கொண்டுள்ளேன். நான் களத்தில் நின்று வேலை செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் கமல்ஹாசன் நான்கைந்து முறை கூட கோவைக்கு வரவில்லை. மக்கள் நீதி மய்யத்திற்கு அரசியல் வாழ்க்கை தேவை என்பதால், கோவை தெற்கு தொகுதி தான் கண்ணில் தெரிகிறது. கமல்ஹாசன் ஒரு பொண்ணுக்கு கார் வாங்கி தந்தார். அதை கோவைக்கு வந்து கொடுக்க கூட அவருக்கு நேரமில்லை. நான் 1000 பெண்களுக்கு தையல் இயந்திரம் வாங்கி தந்து தொழில் முனைவோராக மாற்றியுள்ளேன்” எனத் தெரிவித்தார்.