மத்திய அரசு அண்மையில் குடியுரிமை திருத்த சட்டமசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இதற்கு காங்கிரஸ்,திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் என முக்கிய எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மாணவர் அமைப்புகளும் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர். டெல்லியில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் வன்முறை வெடித்து பலர் தாக்கப்பட்டனர்.

இந்த மசோதாவில் இசுலாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என மத்திய அரசு விளக்கமளித்தது. எனினும் அதை ஏற்க மறுத்து இஸ்லாமிய அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் குடியுரிமை மசோதா மற்றும் குடிமக்கள் பதிவேடு தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தை பாஜக நாடு முழுவதும் நடத்தி வருகிறது. இந்தநிலையில் கர்நாடக மாநிலத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் பாஜக எம்.எல்.ஏ ஒருவர் இஸ்லாமியர்களை எச்சரிக்கும் வகையில் பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் நடந்த கூட்டத்தில் பேசிய பாஜக எம்எல்ஏ சோமசேகர் ரெட்டி, இஸ்லாமியர்களை குறிப்பிட்டு, 'குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை. நாங்கள் 80 சதவீதம், நீங்க 17 சதவீதம் தான். நாங்கள் நடவடிக்கை எடுத்தால் என்ன நடக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்' என்றார். மேலும் வேண்டுமென்றால் இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்கு செல்லலாம் என்றும் ஆனால் தாங்களாக அனுப்ப மாட்டோம் எனவும் பேசியிருக்கிறார்.

பாஜக எம்.எல்.ஏ ஒருவரின் இந்த பேச்சு கர்நாடகாவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. அவருக்கு எதிராக பல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்தி வந்த நிலையில் காவல்துறையினர் சோமசேகர ரெட்டி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.