கோயமுத்தூரில் பெரியார் சிலை அவமரியாதை செய்யப்பட்டதையடுத்து, சில கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்திவரும் நிலையில், கோவையில் உள்ள பாஜக கட்சி அலுலவகத்தில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.


“கோவையில் கோயில்கள் சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் மாநில அரசு மெத்தனமாகச் செயல்படுகிறது. இது கடும் கண்டனத்துக்குரியது. இந்த விவகாரத்தில் போலீஸாரை சுதந்திரமாக செயல்பட இந்த அரசு அனுமதிக்கவில்லை. இந்த விவகாரத்தில் நடுநிலையோடு நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்கக் கூடாது. இந்த விஷயத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உதவியை நாடவும் பாஜக தயங்காது. அதனால் தற்போது அரசுக்கு முதல் எச்சரிக்கை விடுக்கிறோம்.
இந்து கோயில்கள் தாக்கப்பட்டது பற்றி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை, எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வத்தை விட இந்து மக்களைப் பற்றி அவர் புரிந்திருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. அது வேலூரில் கிடைத்த 8 ஆயிரம் வாக்குகளில் கிடைத்த வெற்றியும், இடைத்தேர்தலில் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கிடைத்த தோல்வியும் மு.க.ஸ்டாலினுக்கு அந்த யதார்த்த நிலையை உணர்த்தியிருக்கிறது. இதை எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் புரிந்துகொள்ளவில்லை என்றால், வரும் தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவும். இதில் மாற்றுக் கருத்தே இல்லை” என்று சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.