3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் ஊர்வலமாக சார் ஆட்சியர் அலுவலகம் வரை சென்ற எல்.முருகனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதால் தேர்தல் திருவிழா களைக்கட்டியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை, வேட்பாளர்கள் அறிவிப்பு ஆகிய பணிகளை எல்லாம் முடித்துக் கொண்டு, தற்போது தேர்தல் களத்தில் வேட்பாளர்களுக்கு தீவிர ஓட்டு வேட்டை நடத்தி வருகின்றனர். அதிமுகவுடனான பாஜக கூட்டணிக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 

சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிய உள்ளதை அடுத்து இன்று கட்சியின் முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்கள், நட்சத்திர வேட்பாளர்கள் உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். தாராபுரம் தனி சட்டப்பேரவைத் தொகுதிக்கு பாஜக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

தாராபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் பணிமனையில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் ஊர்வலமாக சார் ஆட்சியர் அலுவலகம் வரை சென்ற எல்.முருகனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சார் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி பவன்குமாரிடம் எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவருடன் இதன்பிறகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.பி.சி.மகேந்திரன் ஆகியோர் இருந்தனர். 

தன்னுடைய டெபாசிட் தொகையை செலுத்துவதற்காக தொண்டர்களிடம் இருந்து பெற்ற 5, 2 ரூபாய் நாணயங்கள், 10 ரூபாய் நோட்டுக்களை எல்.முருகன் வசூலித்து வைத்திருந்தார். அதனை தேர்தல் நடத்தும் அதிகாரி முன்பு எண்ணி காண்பித்து, சரியாக 5 ஆயிரம் ரூபாய் இருப்பதை உறுதி செய்த பிறகே செலுத்தினார். வேட்புமனு தாக்கலுக்கு முன்பாக பழனி முருகன் கோயிலில் எல்.முருகன் சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.