எடப்பாடி பழனிசாமியே மீண்டும் தமிழக முதல்வராவார் என்று பொருளில்தான் நாளையும் அதிசயம் நடக்கும் என்று நடிகர் ரஜினி காந்த் பேசியிருப்பார் என தமிழக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன், முன்னாள் மத்திய இணையமைச்சர் ஓ.ராஜகோபால் ஆகியோருக்கு கட்சி சார்பில் பாராட்டு விழா சென்னை தி. நகரில் உள்ள கட்சி அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பாஜக மூத்த  தலைவர் இல.கணேசன் பேசினார்.

 
“ நாளையும் அற்புதம், அதிசயம் நடக்கும் என்று ரஜினி கூறியுள்ளார். மீண்டும் முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்பார் என்ற பொருளிலேயே நாளையும் அதிசயம் நடக்கும் என ரஜினிகாந்த் கூறியிருப்பார். இது என்னுடைய கூற்று அல்ல. ரஜினியின் கூற்றுதான். ரஜினி சொன்னதன் பொருளையே நான் இப்போது கூறியிருக்கிறேன்.  ரஜினி திருவள்ளுவர் என்றால் நான் பரிமேலழகர்.
இலங்கை அதிபர் இந்தியா வரக் கூடாது என்று போராட்டம் நடத்துவது சரியல்ல. இலங்கை அதிபர் இந்தியா வந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தால்தான் அவருடன் ஏதேனும் பேச முடியும். மகாராஷ்டிராவில் என்ன நடக்கும் என்பது நாளை தெரிந்துவிடும்.” என்று இல. கணேசன் தெரிவித்தார்.