முரசொலி நில விவகாரம் தொடர்பாக திமுக - பாமக இடையே மீண்டும் அறிக்கை போர் தொடங்கியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் பாஜகவும் சேர்ந்து திமுகவை கிண்டலடித்துவருகிறது.
முரசொலி நில விவகாரம் கொஞ்சம் ஆறிப்போயிருந்த நிலையில், அதை மீண்டும் சூடாக்கிவிட்டிருக்கிறார் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ். முரசொலி விவகாரம்  தொடர்பாக டெல்லி எஸ்.சி./எஸ்.டி. ஆணையத்தில் திமுக தரப்பு தாக்கல் செய்த மனுவில், முரசொலி அலுவலகம் வாடகை கட்டிடத்தில் இயங்கிவருவதாக தெரிவித்துள்ளதாகக் கூறி திமுகவை நையப்புடைத்துவிட்டார் ராமதாஸ். 
ட்விட்டரில் ராமதாஸின் ட்வீட்டைப் பார்த்த திமுக, தன்னுடைய எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவனை வைத்து பதில் அறிக்கையை வெளியிட்டது. அவரும் ராமதாஸை அர்ச்சணை செய்து, முரசொலி நிலம் பஞ்சமி நிலத்தில் இருக்கிறது என்று சொன்ன ராமதாஸ் ஆதாரங்களைத் தர வேண்டும் அப்படி இல்லையென்றால், பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று டி.கே.எஸ். இளங்கோவன் பதிலடிக் கொடுத்திருந்தர். டி.கே.எஸ். இளங்கோவனை வைத்து அறிக்கை வெளியிட்டால், பாமக சும்மா இருக்குமா? உடனே அதற்கு பதிலாக பாமக தலைவர் ஜி.கே. மணியை வைத்து பதில் அறிக்கையை வெளியிட்டது.


அவரும் டிகேஎஸ். இளங்கோவனையும் மு.க. ஸ்டாலினையும் விமர்சித்து திமுக அடித்த பல்டி என விமர்சனம் செய்திருந்தார். முரசொலி அலுவலகம் வாடகை கட்டிடத்தில் இயங்குகிறது என்றால், அந்தப் பிரச்னை எழுந்த அன்றே அதை சொல்லியிருக்கலாமே என்று கேள்வி எழுப்பிய ஜி.கே.மணி, சவால்விட்ட மு.க. ஸ்டாலின் அரசிலையை விட்டு எப்போது விலகுவார் என்று கேட்டு சொல்லும்படி டி.கே.எஸ். இளங்கோவனை கிண்டலடித்திருந்தார்.
திமுகவுக்கும் பாமகவுக்கு இப்படி அறிக்கை சண்டை ஓடிக்கொண்டிருக்க, ஏற்கனவே இந்த விவகாரத்தில் மூக்கை நுழைத்த பாஜகவும் இதில் களமிறங்கியுள்ளது. நேற்று முழுவதுமே சமூக ஊடகங்களில் #முரசொலிவாடகைஒப்பந்தம்எங்கே, #முரசொலிவாடகைரசீதுஎங்கே என்று கேள்வி கேட்டுக்கொண்டிருந்தனர் பாஜகவினர். மேலும் தமிழக பாஜகவின் அதிகாரபூர்வ  ட்விட்டரிலும் இதுதொடர்பாக இரு பதிவுகளை போட்டுள்ளனர்.
முதல் பதிவில், “தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் 
தன்நெஞ்சே தன்னைச் சுடும். பட்டா வெளியிட்டது, வழக்கு போடுவோம்ன்னு மிரட்டியது, ஆணையத்தில் ஆதாரம் தந்துவிட்டோம்ன்னு அள்ளிவீசியது என அவ்வளவும் பொய்யா? சரி, இனி மூலப்பத்திரம் வேண்டாம்.. #முரசொலிவாடகைஒப்பந்தம்எங்கே, #முரசொலிவாடகைரசீதுஎங்கே” என்று கேள்வி எழுப்பியிருந்தது தமிழக பாஜக.


இரண்டாம் பதிவில், “ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு. ஒரு பொய்யை மறைக்க இன்னொன்று. எவ்வளவு தான் புளுகுவார் @mkstalin. வாடகை கட்டடத்திற்கா இவ்வளவு பெரிய விளக்கத்தை வெளியிட்டார். வாடகை ரசீது கேட்டால் அழுது புரண்டு அரசியலுக்கு முழுக்கு என்றே சொல்லிடுவாரோ?” என்று கிண்டலடித்துள்ளது பாஜக.
முரசொலி நில விவகாரம் எப்போதான் ஓயுமோ?!