நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததால்தான் அதிமுக தோல்வி ஏற்பட்டதாக தமிழக சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார். 
 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணி ஓரிடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. திமுக கூட்டணி பெரும் வெற்றியைப் பெற்றது. மத்தியில் பாஜக ஆட்சியமைத்தாலும் அக்கட்சி தமிழகத்தில் போட்டியிட்ட ஐந்து தொகுதிகளிலும் மண்ணைக் கவ்வியது. தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி தோல்வியடைந்ததற்கு மோடி எதிர்ப்பு அலை காரணம் என்று பலரும் பேசிய வேளையில், அதிமுகவுக்கு எதிர்ப்பு அலைதான் காரணம் என்பதுபோல துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கருத்து தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததால்தான் அதிமுக தோல்வியடைந்ததாக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வானுார் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற சி.வி. சண்முகம் இக்கருத்தைத் தெரிவித்தார். 
 “தமிழக மக்கள் மிகவும் தெளிவானவர்கள். மாநிலத்தில் யார் ஆள வேண்டும் மத்தியில் யார் ஆள வேண்டும் எனத் தீர்மானித்து தமிழக மக்கள் வாக்களித்துள்ளார்கள். தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடர வாக்களித்துள்ளார்கள். திமுக வெற்றி பெற வேண்டும் என்று யாரும் ஓட்டு போடவில்லை. நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியை மக்கள் அதிமுகவுக்கு அளித்த எச்சரிக்கையாக தலை வணங்கி ஏற்றுக்கொள்கிறோம். அதே வேளையில் தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால்தான் அதிமுக தோல்வி அடைந்தது. அதிமுகவுக்கு வர வேண்டிய சிறுபான்மையினர் ஓட்டுகள் கிடைக்காமல் போய்விட்டது.” என்று சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
அதிமுக தோல்விக்கு பாஜகவுடன் கூட்டணி அமைத்ததே காரணம் என அமைச்சர் ஒருவரே வெளிப்படையாகத் தெரிவித்திருப்பதால், அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுவருகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.