மாய்மால வித்தை பண்ணுது பாஜக.. திரெளபதி முர்முவை ஆதரிக்காதீங்க.. ஒடிஷா-ஆந்திரா முதல்வர்களுக்கு திருமா கோரிக்கை
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும் தங்களின் நிலைபாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “உலக வரலாற்றில் லட்சக்கணக்கான மக்களின் உயிரிழப்புக்குக் காரணமானவை ஹிட்லரின் நாசிக் கொள்கையும், முசோலினியின் பாசிசக் கொள்கையும் என்பதை உலகம் அறியும். அத்தகைய இனவாதக் கொள்கைகளை முன்மாதிரியாகக் கொண்டு வரையறுக்கப்பட்டதுதான் சங்பரிவார்களின் "ஒரேதேசம் - ஒரே கலாசாரம்" என்னும் மதவாத - சனாதனப் பயங்கரவாதக் கருத்தியலாகும். அதாவது சனாதனவாதிகள் இங்கே கட்டமைக்க விரும்பும் இந்து ராஷ்டிரம் ஒரே தேசம் என்பது ஹிட்லரின் ஜெர்மனியையும் முசோலினியின் இத்தாலியையும் தம்முடைய ஆதர்சமாகக் கொண்டதே ஆகும்.
ஹிட்லரின் இனவெறி ஆட்சியில் எப்படி யூதர்கள் மட்டுமின்றி ஜெர்மானியர்களும் கொடூர வதைகளுக்கு ஆளானார்களோ அதுபோலவே இந்து ராஷ்டிரம் என்பதும் இங்கே சிறுபான்மையினருக்கு மட்டுமின்றி இந்துக்களுக்கும் பேராபத்தாகவே முடியும். அத்தகைய இந்து ராஷ்டிரத்தை அமைத்திட அனைத்துத் தளங்களிலும் தமக்கு ஆதரவானவர்களை ஆங்காங்கே சனாதனிகள் தேடித்தேடி முதன்மையான அதிகார மையங்களில் அமர்த்தி வருகின்றனர்.
அதாவது, இந்தியக் குடியரசின் அடித்தளங்களாக விளங்கும் நாடாளுமன்றம், சட்டப்பேரவைகள் உள்ளிட்ட சட்டங்களை இயற்றும் சட்டத்துறை; அவற்றை நடைமுறைப்படுத்தும் நிர்வாகத்துறை மற்றும் நீதித்துறை, ஆகியவற்றுடன், ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இயங்கும் ஊடகத்துறை உள்ளிட்ட அனைத்தையும் தங்களின் எதேச்சாதிகாரப் போக்குகளுக்குத் துணை போகக்கூடிய வகையில் தமதாக்கிக் கொண்டு, இன்றைய கொடுங்கோலாட்சி தமது விருப்பம்போல இயங்கிட வேண்டும் என்கிற வகையில் அதற்கான ஏற்பாடுகளைச் சனாதனவாதிகள் திட்டமிட்டே செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றார் ஏக்நாத் ஷிண்டே… துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்பு!!
அதற்கேற்ப தமக்குத் தோதான; தாம் சொல்வதற்கெல்லாம் தலையாட்டி இசைவு தெரிவிக்கிற; எவ்வித தனித்துவ சுதந்திரமும் துணிவும் செயலாற்றலும் இல்லாத - இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து நெளிந்து கொடுக்கிற ஒருவரை இந்திய குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே அவர்களின் தொலைநோக்குத் திட்டம். இந்தப் பயங்கரவாத சதித்திட்டத்தை முறியடிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளரை வீழ்த்துவதும் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரை வெற்றிபெற வைப்பதுமே ஜனநாயக சக்திகளின் கடமையாகும். அதற்கு பாஜக அல்லாத அனைத்துக் கட்சிகளும் முன் வரவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.
இந்திய நாடாளுமன்ற ஜனநாயக முறையை ஒழித்துக் கட்டுவதற்கான உள்நோக்கத்தோடு செயல்பட்டுவரும் சனாதன சக்திகள் 2024 தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுவிட்டால் அதன் பின்னர் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளையெல்லாம் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி, நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறையை நிரந்தரமாகத் தமக்கேற்ப மாற்றி அமைத்துக் கொள்வார்கள். குறிப்பாக, இன்றைய அரசியலமைப்புச் சட்டத்தைத் தூக்கியெறிந்துவிட்டு, அவ்விடத்தில் தமக்கான மனுஸ்மிருதி எனும் சட்டத்தை வைத்து நிலைப்படுத்தி விடுவார்கள்.
இவற்றையெல்லாம் தடுக்க வேண்டுமென்றால் மதச்சார்பின்மை, நாடாளுமன்ற ஜனநாயக முறை, குறிப்பாக அரசியலமைப்புச் சட்டம் ஆகியவற்றின்மீது மதிப்பும் நம்பிக்கையும், உறுதிப்பாடும் கொண்ட ஒருவரைக் குடியரசுத் தலைவராக ஆக்கிட வேண்டும். அதற்காகவே எதிர்க்கட்சிகளின் சார்பில் அத்தகைய வலுவைக் கொண்ட யஷ்வந்த் சின்ஹாவைப் பொதுவேட்பாளராகக் களத்தில் நிறுத்தியிருக்கிறோம்.
இதையும் படிங்க: ஒரே பாணியில் கவிழ்ந்த கர்நாடகா. மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா அரசுகள்.. 3 எதிர்க்கட்சி அரசுகள் காலியான கதை!
பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த திரவுபதி முர்மு என்கிற பெண்மணியைத் தமது வேட்பாளராக பாஜக களமிறக்கியுள்ளது. திட்டமிட்டே பழங்குடிப் பெண் என்கிற சாதி அடையாளத்தை பாஜக முன்னிறுத்துகிறது. இந்த மாய்மால அடையாள அரசியல் வித்தைகளுக்கு இடங்கொடுத்து சனநாயக சக்திகள் ஏமாந்து விடக்கூடாது. குறிப்பாக, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும், ஒடிசா முதல்வர் நவீன்பட் நாயக்கும் தங்களின் நிலைபாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென விசிக சார்பில் கோரிக்கை விடுக்கிறோம்.
தற்போது குடியரசுத் தலைவராக இருக்கும் தலித் அடையாளத்தைக் கொண்ட ராம்நாத் கோவிந்த் இன்றைய காலத்தில்தான் அகில இந்திய அளவில் வழக்கம்போல தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தலைவிரித்தாடுகின்றன. குறிப்பாக, ஆணவக் கொலைகளும் தலித் பெண்களுக்கெதிரான இழிவதைகளும் உ.பி உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் அதிகரித்துள்ளன.
அத்துடன், அவர்களுக்காகக் குரல் கொடுத்த கட்சி சார்பற்ற ஜனநாயக சக்திகளும் தேச விரோதிகள், பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டு சிறைபடுத்தப்பட்டு வதைக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, புரட்சியாளர் அம்பேத்கரின் மகன்வழி பேத்தியின் கணவரான புகழ்பெற்ற கல்வியாளர் பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே உள்ளிட்ட அறிவார்ந்த ஆன்றோர் பலர் ஊபா எனும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தலித் மற்றும் பழங்குடியினர் மீதான இத்தகைய தாக்குதல்களைக் கண்டித்து நேரடியாக இல்லையென்றாலும் மறைமுகமாகக் கூட ஒரு வார்த்தையையும் தற்போதைய குடியரசுத் தலைவர் உதிர்த்ததில்லை. தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை குடியரசுத் தலைவராக ஆக்கிவிட்டு அவர்சார்ந்த மக்களையே அடக்கி ஒடுக்கி வருகின்றனர். அவர்களது உரிமைகளைப் பறித்து வருகின்றனர். இப்போது பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவரை குடியரசுத் தலைவர் ஆக்கப் போகிறோம் என்கிறார்கள்.
இதையும் படிங்க: உதய்ப்பூர் படுகொலை-சனாதனிகள் விரித்த சதிவலை.. திருமாவளவன் பகீர்.
பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவரைக் குடியரசுத் தலைவர் ஆக்கிவிட்டு பழங்குடி மக்களைப் பாதுகாத்திடவா போகின்றனர்? அப்துல் கலாம் அந்த இருக்கையில் அமரவைத்துக் கொண்டே இஸ்லாமியர்களை ஒடுக்கிய அவர்கள், ராம்நாத் கோவிந்தை அவ்விருக்கையில் அமரவைத்துக் கொண்டே தலித்துகளை ஒடுக்கிய அவர்கள், இன்று பழங்குடியினத்தைச் சார்ந்த ஒருவரை அந்த சிம்மாசனத்தில் அமரவைத்துவிட்டு பழங்குடி மக்களை ஒடுக்கமாட்டார்கள் என்பதற்கு என்ன உறுதிப்பாடு உள்ளது?
இந்நிலையில், இன்றைய குடியரசுத் தலைவர் தேர்தல் என்பது இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தையும், அதற்கு அடித்தளமாக இருக்கின்ற அரசியலமைப்புச் சட்டத்தையும் காப்பாற்றுவதற்கான ஒரு கோட்பாட்டுப் போராட்டம் ஆகும். இதனை உணர்ந்து இதுவரை முடிவு எடுக்காத அரசியல் கட்சிகளும் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிக்க முன்வருமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.