ஒரே பாணியில் கவிழ்ந்த கர்நாடகா. மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா அரசுகள்.. 3 எதிர்க்கட்சி அரசுகள் காலியான கதை!
கடந்த மூன்று ஆண்டுகளில் கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா என மூன்று மாநிலங்களிலும் ஒரே பாணியில் எதிர்க்கட்சிகளின் அரசுகள் கவிழ்க்கப்பட்டிருக்கின்றன.
மகாராஷ்டிராவில் சுமார் இரண்டரை ஆண்டுகள் நீடித்த சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிக:ள் அடங்கிய மகா விகாஸ் கூட்டணி ஆட்சி, உத்தவ் தாக்கரே ராஜினாமா மூலம் முடிவுக்கு வந்திருக்கிறது. சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால் ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டு, ஆட்சி கவிழ்ந்திருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா என இந்த மூன்று மாநிலங்களிலும் ஒரே பாணியில் எதிர்க்கட்சிகளின் அரசுகள் கவிழ்க்கப்பட்டிருக்கின்றன.
கர்நாடகா கவிழ்ப்பு
கர்நாடகா மாநிலத்தில் 2018-ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 224 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் தனிப்பெரும் கட்சியாக பாஜக 104 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 80 இடங்களிலும் மதசார்பற்ற ஜனதாதளம் 37 தொகுதிகளில் வென்றன. பாஜகவுக்கு மெஜாரிட்டிக்கு 9 இடங்கள் குறைவாக இருந்தன. இதனையடுத்து காங்கிரஸும் மதசார்பற்ற ஜனதாதளமும் கூட்டணி அமைத்து மெஜாரிட்டியைப் பெற்று குமாரசாமி தலைமையில் ஆட்சியைப் பிடித்தன. அப்போது முதல் கூட்டணி அரசுக்கு தலைவலி தொடங்கியது. அமைச்சர் பதவி கிடைக்காதவர்கள் மூலம் சிக்கல் ஏற்பட்டது. குமாரசாமி அரசு ஓராண்டைக் கடந்த நிலையில் 13 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், 3 மதசார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏ.க்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக கூறிவிட்டு மும்பைக்கு சென்று உட்கார்ந்துக்கொண்டனர். பின்னர் கடத்தல், துரத்தல் என பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறின. இதனையடுத்து 16 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். இதனால், கூட்டணி அரசின் பலம் குறைந்துபோனது. பின்னர் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமிக்கு 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவாயின. இதனால், குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. பின்னர் பாஜக ஆட்சி மலர்ந்தது.
இதையும் படிங்க: நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே ராஜினாமா... உத்தவ் தாக்கரே அதிரடி அறிவிப்பு!!
மத்தியப்பிரதேச கவிழ்ப்பு
கிட்டத்தட்ட கர்நாடகம் போலவேதான் மத்தியப்பிரதேசத்திலும் காட்சிகள் அரங்கேறின. 2018-இல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் 114 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. பாஜக 109 இடங்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும் சுயேட்சைகள் நான்கு இடங்களிலும் வென்றிருந்தனர். காங்கிரஸ் கட்சிக்கு மெஜாரிடிக்கு 2 இடங்கள் குறைவாக இருந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சுயேட்சைகள் சிலரது ஆதரவுடன் கமல்நாத் முதல்வரானார். கமல்நாத் ஆட்சிக்கு வந்தது முதலே திரைமறைவில் கவிழ்ப்பு முயற்சிகள் தொடங்கின. கமல்நாத் ஆட்சி ஓராண்டைக் கடந்த நிலையில், தனக்கு முதல்வர் பதவி கிடைக்காததால் காங்கிரஸில் அதிருப்தியில் இருந்த ஜோதிராதித்யா சிந்தியாவின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துவிட்டு பெங்களூருவுக்கு சென்றுவிட்டார்கள். அவர்களை சமாதானப்படுத்த காங்கிரஸ் முயன்றும் முடியவில்லை. இறுதியில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா ஏற்கப்பட்டது. இதனால், காங்கிரஸ் பலம் நூறுக்கும் கீழே குறைந்தது. இதனால், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே கமல்நாத் ராஜினாமா செய்தார். 109 எம்.எல்.ஏ.க்களை வைத்திருந்த பாஜக ஆட்சிக்கு வந்தது.
இதையும் படிங்க: ஆளுநரின் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக சிவ சேனா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
மகாராஷ்டிரா கவிழ்ப்பு
மகாராஷ்டிராவில் நடந்த கதையே வேறு. 2019-இல் நடந்த தேர்தலில் பாஜக - சிவசேனா ஒரே கூட்டணியாகத்தான் தேர்தலை சந்தித்தன. 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் மெஜாரிட்டிக்கு 145 உறுப்பினர்கள் தேவை. தேர்தலில் சிவசேனா - பாஜக கூட்டணி 161 தொகுதிகளில் வெற்றி பெற்று மெஜாரிட்டியைப் பெற்றன. முதல்வர் பதவி சிவசேனாவுக்கு வேண்டும் என்பதில்தான் கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டது. முதல்வர் பதவியை பாஜக விட்டுத்தர முன் வராததால், பாஜக கூட்டணியிலிருந்து சிவசேனா விலகியது. முதல்வர் பதவியைப் பிடிப்பதற்காக எதிரும் புதிருமாக தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியுடன் சிவசேனா கைகோர்த்தது. மகா விகாஸ் கூட்டணி என்ற பெயரில் புதிய கூட்டணி உருவானது. இக்கூட்டணிக்கு எம்.எல்.ஏ.க்களின் பலம் 155ஆக இருந்தது. காங்கிரஸும் தேசியவாத காங்கிரஸும் முதல்வர் பதவியை சிவசேனாவுக்கு விட்டுக்கொடுத்தன. இதனால், உத்தவ் தாக்கரே தலைமையில் கூட்டணி ஆட்சி பதவியேற்றது. இந்த அரசை கவிழ்க்கவும் திரைமறைவில் தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் நடந்து வந்தன. சுமார் இரண்டரை ஆண்டு காலத்தை இக்கூட்டணி தாண்டிய நிலையில், 30-க்கும் மேற்பட்ட சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மூலம் சிக்கல் ஏற்பட்டது. குஜராத், அஸ்ஸாம் என இந்த எம்.எல்.ஏ.க்கள் டேரா போட்ட நிலையில், சமாதானம் ஏற்படாததால், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே உத்தவ் தாக்கரே பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன்மூலம் இரண்டரை ஆண்டு கால மகா விகாஸ் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தது. இங்கும் பாஜக ஆட்சி மலரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மகாராஷ்டிரா நம்பிக்கை வாக்கெடுப்பு; சிறையில் இருக்கும் நவாப் மாலிக், அனில் தேஷ்முக் வாக்களிப்பார்களா?