புதுச்சேரி சபா நாயகர் சிவக்கொழுந்துவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் பின்னணியில் பாஜக இருப்பதாக புதுச்சேரி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது. புதுச்சேரி சபாநாயகராக இருந்த வைத்தியலிங்கம், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாகிவிட்டார். அவருடைய பதவி காலியானதால், புதுச்சேரி சபாநாயகராக ஓரிரு மாதங்களுக்கு முன்பு சிவக்கொழுந்து பதவியேற்றார். இந்நிலையில் சிவக்கொழுந்துவுக்கு எதிராக என்.ஆர். காங்கிரஸ், அதிமுக கூட்டணி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருவதற்காக நோட்டீஸ் வழங்கியுள்ளது.


புதுச்சேரி சட்டப்பேரவை விரைவில் கூட உள்ள நிலையில், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. வைத்தியலிங்கம் போட்டியிட்டு வெற்றி பெற்ற காமராஜ் நகர் தொகுதி காலியாக உள்ளதால், புதுச்சேரியில் தற்போதைய உறுப்பினர் எண்ணிக்கை 29 ஆக உள்ளது.  காங்கிரஸ் கட்சிக்கு 14 எம்.எல்.ஏ.க்களும், திமுகவுக்கு 3 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 7 எம்.எல்.ஏ.க்களும், அதிமுகவுக்கு 5 எம்.எல்.ஏ.க்களும், சுயேட்சை எம்.எல்.ஏ.க்களும் சபையில் உள்ளனர். காங்கிரஸ் கூட்டணிக்கு சபாநாயகர் நீங்கலாக 16 உறுப்பினர்களின் பலம் உள்ளது.


இந்நிலையில் புதுச்சேரி சபாநாயகருக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் பின்னணியில் என்.ஆர். காங்கிரஸ், அதிமுக கூட்டணி கட்சியான பாஜக இருப்பதாக புதுச்சேரி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆளுங்கட்சியில் சில எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களை தங்கள் பக்கம் இழுத்து ஆளுங்கட்சிக்கு நெருக்கடிக் கொடுப்பதற்காக பாஜக முயற்சி மேற்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. 
இதனையடுத்து அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களை சரிகட்டும் முயற்சியில் ஆளுங்கட்சி ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் வீசிக்கொண்டிருந்த அரசியல் நெருக்கடி ஒரு வழியாக முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், தற்போது புதுச்சேரியில் தொடங்கியுள்ளது. நம்பிக்கை தீர்மானத்துக்குப் பிறகு அது புதுச்சேரி அரசியலில் எந்தப் போக்கில் செல்கிறது என்பது தெரியவரும்.