அதிமுக - பாஜக கூட்டணி குறித்து அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பூடாகமாகப் பேசிவரும் நிலையில், கூட்டணியில் கொங்கு மண்டலத்தில் அதிக தொகுதிகளில் போட்டியிட பாஜக ஆயத்தமாகி வருகிறது.

அதிமுகவோடு பாஜக கூட்டணி அமைக்கும் என்று பொதுவெளியில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இதுபற்றி அதிமுக தலைமை வெளிப்படையாக எதையும் கூறாத நிலையில், பிற தலைவர்கள் பாஜகவை பற்றி தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள். ஆனால், இதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாத பாஜக, அதிமுக கூட்டணியில் கொங்கு மண்டலத்தில் அதிகத் தொகுதிகளில் போட்டியிம் ஆசையில் உள்ளது. 

பாஜகவுக்கு சாதகமாகப் பார்க்கப்படும் தொகுதிகளில் ஒன்று கோயம்புத்தூர். 1998, 1999 ஆகிய ஆண்டுகளில் முறையே அதிமுக, திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட சுமார் இரண்டரை லட்சம் வாக்குகளை பாஜக இங்கே பெற்றது. கோவையில் பாஜக ஓரளவு செல்வாக்காக இருப்பதால், நாடாளுமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று பாஜக தலைவர்கள் ஆயத்தமாகி வருகிறார்கள். 

கொங்கு மண்டலத்தில் கோவை, நீலகிரி, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய தொகுதிகளில் அதிமுகவும் மிக வலுவாக உள்ள பகுதி என்பதால், அவர்களது ஓட்டு வங்கி பாஜகவை வெற்றி பெற வைக்கும் என்று பாஜக தலைவர்கள் கணக்கு போட்டு வருகிறார்கள்.

 

அதனால், இந்த 10 தொகுதிகளில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய 5 தொகுதிகளில் போட்டியிட பாஜக தலைவர்கள் திட்டமிட்டு வருகிறார்கள். ஒரு வேளை பாஜக - அதிமுக கூட்டணி அமைந்தாலும், பாஜகவின் விருப்பத்தை அதிமுக தலைவர்கள் ஏற்பார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி.