‘கள்ளச்சாராயம் காய்ச்சி குண்டாஸில் சென்றவர்கள் எல்லாம் தமிழக அமைச்சராக இருக்கின்றனர்’ என்று திமுக அமைச்சர்களை கடுமையாக விமர்சித்து இருக்கிறார் ஹெச்.ராஜா.
பா.ஜ.க முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா நேற்று சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வந்தார். கோவிலுக்குள் சென்று நடராஜரை வழிபட்ட ஹெச்.ராஜா, கோயிலை விட்டு வெளியே வந்து தெற்கு சன்னதி நுழைவு வாயில் அருகே பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘சிதம்பரம் நடராஜர் கோயிலை அபகரிக்க ஒரு கும்பல் முயற்சித்தது. ஆனால் நீதிமன்றத் தீர்ப்பால் அது நடைபெறவில்லை. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பட்டா நிலத்தில் இருந்த கோயில் இடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே மாவட்டத்தில் பொழுதுபோக்கு பூங்கா இடத்தை மீட்க வேண்டும். வாடகை வசூலிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தும் இதுவரை அதற்கான நடவடிக்கையை அரசு எடுக்கவில்லை.

கலெக்டர், எஸ்பி போன்றவர்கள், நரிக்கி நாட்டாமை கொடுத்தால் . கிடைக்கு 8 ஆடு கேட்பதைப்போல செயல்படுகிறார்கள். தில்லை நடராஜர் கோயில் தேரோட்டம் நடத்தக் கூடாது என்கிறார்கள். தமிழக முதல்வர் பங்கேற்கும் கூட்டங்களில் ஏராளமானோர் கூடுகிறார்கள். அதற்கு அதிகாரிகள் அனுமதி அளித்து வருகிறார்கள். அதிகாரிகள் துணையோடு கட்சிக் கூட்டங்களை நடத்த அனுமதிக்கப்படுகிறது .ஆனால் அதே கூட்டம் நடராஜர் கோயிலுக்கு வந்தால் தொற்று பரவுமா. ஒரு மனிதனைப் பார்ப்பதற்கு கூட்டம் கூடலாம் என்றால் கடவுளை பார்ப்பதற்கு கூட்டம் கூடக் கூடாதா. இது இந்து விரோத அரசாங்கமாக உள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டத்தை பாஜகவினர் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தியாவது தேரோட்ட விழாவை நடத்த வேண்டும். கள்ளச்சாராயம் காய்ச்சி குண்டாஸில் சென்றவர்கள் எல்லாம் தமிழக அமைச்சராக இருக்கின்றனர். ஒரு அமைச்சர் என்னை வெறி நாய் என்கிறார். திருடனைப் பார்த்து நாய் குறைக்கத்தான் செய்யும். இந்து சமய அறநிலையத்துறை கோயில் நிலங்களை கொள்ளை அடிக்கும் துறையாக உள்ளது. கடந்த வருடம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் நீதிமன்ற உத்தரவுபடி தேரோட்டம் நடந்தது.
தேரோட்டம் நடக்கவில்லை என்றால் அரசனுக்கு ஆகாது என்று சொல்வார்கள். இதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட கோயில்கள் இடிந்து வருகிறது. அதை பராமரிக்கவில்லை. ஆனால் நன்றாக இருக்கின்ற கோயில்களை இடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற செயல்களில் அரசு ஈடுபடக் கூடாது’ என்று கூறினார்.
