கடந்த 10 ஆண்டுகளில் நிமிர்ந்து நின்று பதில் சொல்லும் அளவிற்கு தமிழகத்தில் பாஜக வளர்ச்சி.. நிர்மலா சீதாராமன்.!
30 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தில் முழுமையாக தமிழில் பேசுகிறேன். மன வருத்தத்துடன் இன்று சொல்கிறேன் தாய் மொழி என்னை விடாது; நான் தாய் மொழியை விட மாட்டேன், நான் இந்தியை கற்றுக்கொண்டதால் தமிழை மறக்கவில்லை. என்னால் ஆங்கிலம் பேசும் அளவிற்கு இந்தி பேச முடியவில்லை என்பது வருத்தமாக உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் நிமிர்ந்து நின்று பதில் சொல்லும் அளவிற்கு தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்துள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
துக்ளக் ஆண்டு விழா ஆண்டுதோறும் ஜனவரி 14ம் தேதி நடைபெற்று வந்தது. இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக துக்ளக் 52ம் ஆண்டு விழா நேற்று இரவு சென்னையில் உள்ள மியூசிக் அகாடமியில் நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது, அவர் பேசுகையில் உயர்ந்த குலத்தில் பிறந்தவர்களுக்கான கட்சி. வடமாநில கட்சி என்று பாஜக குறித்து தவறான கருத்து தமிழகத்தில் பரப்பப்படுகின்றது. 30 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தில் முழுமையாக தமிழில் பேசுகிறேன். மன வருத்தத்துடன் இன்று சொல்கிறேன் தாய் மொழி என்னை விடாது; நான் தாய் மொழியை விட மாட்டேன், நான் இந்தியை கற்றுக்கொண்டதால் தமிழை மறக்கவில்லை. என்னால் ஆங்கிலம் பேசும் அளவிற்கு இந்தி பேச முடியவில்லை என்பது வருத்தமாக உள்ளது. இந்தி திணிக்கப்படவில்லை. இந்தி கற்றுக்கொண்டு பேசினால் அதில் தவறில்லை. திராவிட இயக்கம் இந்தி கற்றுக்கொள்ளும் தனிமனித உரிமையைப் பறித்துள்ளது.
மலையாளிகள் இந்தி உள்பட எல்லா மொழிகளையும் கற்றுக்கொண்டு உலகம் முழுவதும் உள்ளனர். மலையாளியை சந்தித்தால் மலையாளத்தில் ஆனந்தமாக பேசிக்கொள்கிறார்கள். அவர்கள் தாய்மொழியை விட்டுவிடவில்லை. அதே நேரத்தில் இந்தி கற்றுக்கொள்ளமாட்டேன் என தமிழர்கள்போல் வெறித்தனமாகவும் இல்லை. பிப்ரவரி, மார்ச் ஆகிய 2 மாதங்கள் ஜி.எஸ்.டியிலிருந்து மத்திய அரசின் பங்குதொகை தமிழகத்திற்கு வழங்கவேண்டியுள்ளது. விரைவில் அது வழங்கப்படும். தமிழக நிதி அமைச்சர் பெட்ரோல் டீசல் வரிவிதிப்பை ஜிஎஸ்.டி வரம்பிற்குள் கொண்டு வர ஒப்புக்கொண்டால் மத்திய அரசு அதனை செய்யும்.
கடந்த 10 ஆண்டுகளில் நிமிர்ந்து நின்று பதில் சொல்லும் அளவிற்கு தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்துள்ளது. தமிழ்நாட்டிற்கு ஒரு தேசிய கட்சி தேவை. அது பாஜகவாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும். பாஜக தமிழக மக்களுக்கு நல்லது செய்யும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறயுள்ளார்.