திமுகவில் எம்பியாக இருந்த சரத்குமார் அந்த கட்சியில் தனக்கு மரியாதை இல்லை என்று கூறி விலகினார். பிறகு அதிமுகவில் இணைந்தார். அங்கும் எதிர்பார்த்த முக்கியத்துவம் இல்லை என்பதால் சமத்துவ மக்கள் கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சி ஆரம்பித்தார். 2011 தேர்தலில் அதிமுக கூட்டணியில் நாடார் சங்கங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை தனது கட்சிக்கு பயன்படுத்தி தென்காசி எம்எல்ஏ ஆனார் சரத்குமார். ஆனால் அதன்பிறகு அவரால் அதிமுக கூட்டணியிலும் சோபிக்க முடியவில்லை.

நடிகர் சங்க தேர்தலால் இமேஜ் டோட்டலாக டேமேஜ் ஆன நிலையில் கடந்த தேர்தலில் திருச்செந்தூரில் அதிமுக சார்பில் போட்டியிட்டும் படு தோல்வி அடைந்தார் சரத்குமார். இதனால் அரசியலில் இருந்து ஒதுங்கி திரைப்படங்களில் கேரக்டர் ஆர்டிஸ்டாக தற்போது சரத் நடித்து வருகிறார். இதற்கிடையே இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் சமயங்களில் அதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரமும் செய்து வருகிறார். வரும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பாஜக நட்சத்திரங்களை தங்கள் பக்கம் இழுக்க முழு மூச்சாக செயல்பட்டு வருகிறது. டி.ராஜேந்தர், பாக்யராஜ் வரிசையில் சரத்குமாரையும் பாஜகவில் இணைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

பாக்யராஜ் பாஜகவில் சேர்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக சொல்கிறார்கள். ஆனால் டி.ஆர்., பேச்சுவார்த்தைக்கு கூட வரவில்லை என்று சொல்லப்படுகிறது. அதே சமயம் சரத்குமாருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கட்சியை பாஜகவுடன் இணைப்பதாகவும் தனது கட்சிக்கு ஒரு ராஜ்யசபா சீட் மற்றும் விட்டமின் ப விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை இழுபறியாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. மாநிலங்களவை எம்பி பதவிக்கு ஓகே சொல்லப்பட்டுவிட்டதாகவும் ஆனால் விட்டமின் ப விவகாரத்தில் பாஜக எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை என்கிறார்கள்.

2006ம் ஆண்டுவாக்கில் சரத்குமார் அதிமுகவில் இணைந்தார். அப்போது அதற்காக அவருக்கு 40 கோடி ரூபாய் வரை கொடுக்கப்பட்டதாக ஒரு பேச்சு உண்டு. இதனை தற்போது சரத்துக்காக பேச்சுவார்த்தை நடத்தும் நபர்கள் பாஜக தரப்பிடம் கூற, சரத் அப்போது நடிகர் பிளஸ் நாடார்கள் மத்தியில் செல்வாக்கோடு இருந்தவர். தற்போது அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர் போல செயல்பட்டு வருகிறார், திருச்செந்தூரில் அனிதா ராதாகிருஷ்ணனிடம் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றவர். எனவே பழைய கதை வேண்டாம், நிதர்சனத்திற்கு வாருங்கள் என்று பாஜக தரப்பில் கூறியதாக சொல்கிறார்கள்.

இதனால் சரத் பாஜகவில் இணையும் பேச்சுவார்த்தை அப்படியே கிணற்றில் போட்ட கல்லாக உள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் சரத்குமாரை பாஜகவின் முக்கிய நிர்வாகி ஒருவர் விரைவில் சந்திக்க உள்ளதாகவும் அப்போது அனைத்து கருத்து வேறுபாடுகளும் களையப்பட்டு நிச்சயமாக அவர் பாஜகவில் இணைக்கப்படுவார் என்றும் இதற்காக தற்போதே பிரதமர் மோடியிடம் டைம் கேட்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைப்பு என்றால் சரத்குமார் இறங்கி வருவார் என்று நம்புகிறார்கள்.