மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியமைக்க துடிக்கிறது. அதற்காக பல வியூகங்களை வகுத்து முடிந்த அளவுக்கு மாநிலங்களை கைப்பற்றிவருகிறது.

காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற முழக்கத்துடன் அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியமைப்பதற்கான வியூகங்களை வகுத்து, அதற்கான பணிகளை மேற்கொண்டுவருகிறது. உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா, குஜராத் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியமைத்தது. 

எதிர்வரும் கர்நாடகா சட்டமன்றத் தேர்தலிலும் ஆளும் காங்கிரஸை வீழ்த்தி, கர்நாடகாவையும் கைப்பற்ற பாஜக முயல்கிறது. அதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டுவருகின்றன.

பாஜகவின் இலக்கிற்கு சவால் விடுக்கும் மாநிலங்களில் தமிழகத்திற்குத்தான் முதலிடம். தமிழகம் தவிர, வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களிலும் பாஜக நலிவடைந்து உள்ளது.

ஆனால் தேர்தல் நடந்து முடிந்த திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றுவருகிறது. இந்த வாக்கு எண்ணிக்கை, பாஜகவிற்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாகவும் பாஜகவை ஊக்குவிக்கும் விதமாகவும் அமைந்துள்ளது.

நாட்டின் மிகவும் எளிய முதல்வராக அறியப்படும் மாணிக் சர்க்கார் தலைமையிலான மார்க்சிஸ்ட் ஆட்சிக்கே(திரிபுரா) சவால் விடுக்கிறது பாஜக. 60 தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி, 24 தொகுதிகளில் தான் முன்னிலையில் உள்ளது. ஆனால் பாஜகவோ 35 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

அதேபோல, நாகாலாந்திலும் ஆளும் நாகா மக்கள் முன்னணி 28 தொகுதிகளிலும் பாஜக 30 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. இதுவரை வடகிழக்கு மாநிலங்களில் பின் தங்கியே இருந்த பாஜக, தற்போது வடகிழக்கு மாநிலங்களிலும் காலூன்ற தொடங்கிவிட்டது.