மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தலால் ஒவ்வொரு கவுன்சிலரும் ஜெயிக்க ஜெயிக்க அவர்களைத் தூக்கிட்டுப் போயிடுவாங்க என்று பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன்  தெரிவித்துள்ளார்.

 
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கு நேரடித் தேர்தல் நடைபெறும் என்ற சட்டத்தை எடப்பாடி தமைலையிலான அரசு கொண்டு வந்தது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான பணிகள் தமிழகத்தில் சூடுபிடிக்கத் தொடங்கிய நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒவ்வொன்றும் மேயர் பதவிக்கான இடங்களைக் கேட்கத் திட்டமிட்டிருந்தன. இதை அதிமுக எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர் பதவிகளை மறைமுகமாகத் தேர்வு செய்யும் அவசரச் சட்டத்தைக் கொண்டுவந்தது அதிமுக அரசு.
இந்தச் சட்டத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்த நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் பெரிதாக எதையும் சொல்லவில்லை. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்பதே என் விருப்பம்; உள்ளாட்சித் தேர்தலில் லட்சம் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தையும் பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளிப்படுத்திவந்தார்.  தற்போது மறைமுகத் தேர்தலுக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

 
இதுதொடர்பாக வார இதழ் ஒன்றுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் அளித்துள்ள பேட்டியில், “என்னைப் பொறுத்தவரை ஏற்றுகொள்ள முடியாத விஷயம் இது. மறைமுகத் தேர்தலால் ஒவ்வொரு கவுன்சிலரும் ஜெயிக்க ஜெயிக்க அவர்களைத் தூக்கிட்டுப் போயிடுவாங்க. சொந்தக்கட்சிகாரங்கத் தூக்கிட்டு போறாங்களா, மற்ற கட்சிக்காரங்க தூக்கிட்டு போறாங்களா என்பதெல்லாம் தெரியாது. இதனால், வெற்றி பெறுபவர்கள் விலை பொருளாக மாறும் வாய்ப்பு ஏற்படும்.
நீண்ட நாட்கள் கழித்து நடக்கும் உள்ளாட்சித் தேர்தல் குழப்பங்கள் நிறைந்ததாக மாறி போகும். பெரும்பான்மையாக வெற்றி பெற்ற உறுப்பினர்களின் கட்சியைச் சார்ந்துதான் மேயர், சேர்மன் எல்லாம் நிற்க முடியும். இதனால், மக்களோடு நேரடித் தொடர்பில் இருக்கும் தரமான உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் வாய்ப்பு இல்லாமல் போகும்” என்று தெரிவித்தார்.