தேர்தல் ஆணையத்திடம் செலவு கணக்கு காட்டிய பாஜக.. எவ்வளவு தெரியுமா?
கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தல், ஆந்திர பிரதேசம் உள்பட 4 மாநில சட்டப்பேரவைகளில் பிரச்சாரத்துக்காக ரூ.1,264 கோடியை பா.ஜ.க. செலவிட்டுள்ளது.
மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கும் பா.ஜ.க., கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் மே வரையிலான காலத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட 4 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்காக செலவிட்ட செலவு கணக்கை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளது.
2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் செலவிட்ட தொகையை காட்டிலும் பா.ஜ.க. கடந்த தேர்தலில் ரூ.714 கோடி அதிகமாக செலவிட்ட தகவல் தெரியவந்துள்ளது.
தேர்தல் ஆணையத்திடம் பா.ஜ..க. அளித்துள்ள அறிக்கையின்படி, நாடாளுமன்ற தேர்தலுக்காக ரூ.1,078 கோடியும், வேட்பாளர்களுக்காக ரூ.186.5 கோடியும் பா.ஜ.க. செலவிட்டுள்ளது.
வேட்பாளர்களுக்கான செலவில் ஊடகங்களுக்கு செலுத்திய ரூ.6.33 லட்சமும், விளம்பரத்துக்காக செய்த ரூ.46 லட்சமும், பொதுகூட்டம் மற்றும் பேரணிகளுக்காக அந்த கட்சி கொடுத்த ரூ.9.91 கோடியும், இதர செலவினம் ரூ.2.52 கோடியும், வேட்பாளர்களின் குற்றவியல் முன்னோடிகளின் விளம்பரத்துக்காக பா.ஜ.க. செலவு செய்த ரூ.48.96 கோடியும் அடங்கும்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் ஒப்பிடும்போது காங்கிரஸ் பிரச்சாரத்துக்காக குறைவாகவே செலவு செய்துள்ளது. 2019 நாடாளுமன்ற தேர்தில் காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரத்துக்காக ரூ.820 கோடி செலவு செய்தது. 2014 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பிரச்சாரத்துக்காக ரூ.516 கோடி செலவு செய்து இருந்தது.