இந்து தெய்வங்களை விமர்சித்து பேசிய திமுக எம்.பி கைது செய்யப்படுவாரா.? முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பும் பாஜக
இந்துக்களின் மனம் புண்படும்படி திமுக எம்பி செந்தில் குமார் பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தது, எனவே முதலமைச்சரின் உத்தரவை ஏற்று ஹிந்து மதம் குறித்த நச்சு கருத்தை பேசிய செந்தில் குமார் மீது தமிழக காவல் துறை நடவடிக்கை எடுக்குமா? என நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
மதரீதியான வன்மங்கள்- ஸ்டாலின் எச்சரிக்கை
தமிழக சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில்,சாதி, மத ரீதியான மோதல்களைத் தடுப்பது ஒரு பக்கம் என்றால், சமூக இணையத் தளங்களின் மூலமாக சாதி, மதரீதியான வன்மங்களைப் பரப்புவர்கள் அதிகமாகி வருகிறார்கள். அவர்களைக் கண்காணிக்க வேண்டும். அவர்கள்தான் சமூக அமைதியைக் கெடுக்க காரணமாக இருக்கிறார்கள். அவர்களால் அப்பாவிகள் பாதிக்கப்படுவார்கள்.
ஸ்டாலின் கருத்து - பாஜக வரவேற்பு
ஆனால் சொகுசாக உட்கார்ந்து கொண்டு இது போன்ற வன்மங்களை விதைப்பவர்கள் தப்பி விடுவார்கள். இப்படி நச்சுக்கருத்துகளை பரப்புவர்களைக் கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தியிருந்தார். இந்தநிலையில் இதனை சுட்டிக்காட்டி பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட அறிக்கையில், ஜாதி, மத ரீதியிலான நச்சுக் கருத்துக்களை பரப்புவோரை கண்காணித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வு கூட்டத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
திமுக எம்பி மீது நடவடிக்கை
வட மாநிலத்தில் விநாயகருக்கு பின் சிவன்-பார்வதி குடும்பக் கட்டுப்பாடு செய்தார்களா?" என்று தருமபுரி பாராளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் அவர்கள் ஹிந்துக்களின் மனம் புண்படும்படி பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தது, தண்டிக்கத்தக்கது. முதலமைச்சரின் உத்தரவை ஏற்று ஹிந்து மதம் குறித்த நச்சு கருத்தை பேசிய செந்தில் குமார் மீது தமிழக காவல் துறை நடவடிக்கை எடுக்குமா?
முதலமைச்சரின் உத்தரவுக்கிணங்க பாராளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் கைது செய்யப்படுவாரா? மதம் குறித்து அவதூறு கருத்தை கூறிய செந்தில் குமார் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிடுவார் என உறுதியாக நம்புகிறேன் என நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்