Asianet News TamilAsianet News Tamil

அடுத்து வரும் ஓராண்டுகாலம் நமக்கு மிகவும் முக்கியமானது! தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது!முதல்வர் ஸ்டாலின்

போதைதான் கொலை, கொள்ளை, பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்கு தூண்டுதலாக இருக்கிறது. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் போதை மருந்துகளை பயன்படுத்துபவர்களாக இருப்பார்கள். 

Tamil Nadu is becoming a peace park... CM Stalin pride
Author
First Published Jul 11, 2023, 3:05 PM IST

சமூக வலைதளங்களில் சாதி, மத ரீதியான வன்மங்களை பரப்புபவர்கள் அதிகமாகி வருகின்றனர்  என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில்;- தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து ஆய்வுக் கூட்டமாக இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்று சொல்வதால், ஏதோ நிறைய பிரச்சினைகள் இருப்பதாக நீங்கள் கருதத் தேவையில்லை. சட்டம் ஒழுங்கானது பெரிய அளவில், பிரச்னைக்குரியதாக இல்லை என்பதுதான் நம்மை மட்டுமல்ல, மக்களையும் மகிழ்வித்து வரக்கூடிய செய்திதான். ஒரு அரசு நல்லரசாகச் செயல்படுவதற்கு சட்டம் ஒழுங்கு முறையாக நிலைநிறுத்தப்பட வேண்டும். தமிழ்நாடு இன்று அமைதிப் பூங்காவாகத் திகழ்வதற்கு முக்கியமான காரணம், நமது அரசு சட்டம்-ஒழுங்கிற்குக் கொடுத்து வரக்கூடிய முக்கியத்துவம்தான். சட்டம் ஒழுங்கை முறையாக கடைப்பிடித்து வருகிறோம் என்பதன் அடையாளம்தான் கடந்த இரண்டு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள்.

இதையும் படிங்க;- பெண்களின் தாலியை அறுக்கவே ஆயிரம் ரூபாய் - கொட்டும் மழையில் காளியம்மாள் உணர்ச்சி பொங்க பேச்சு

Tamil Nadu is becoming a peace park... CM Stalin pride

நிம்மதியும், அமைதியும் இருக்கும் மாநிலத்தில்தான் நினைத்த திட்டங்களை செயல்படுத்த முடியும். அந்த வகையில் மிக மிக நிறைவான காலமாக இந்த இரண்டு ஆண்டு காலம் அமைந்துள்ளது. இதற்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள், அலுவலர்கள், காவலர்கள் அனைவருக்கும் எனது நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கடந்த ஆறு மாதங்களில் காவல்துறையின் செயல்பாடுகள் மற்றும் குற்ற வழக்குகள், சட்டம் ஒழுங்கு குறித்த நிலவரங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. காவல்துறையின் செயல்பாடுகள் மிக மிக திருப்திகரமாக உள்ளது. என்றாலும், அடுத்து வரும் ஓராண்டுகாலம் நமக்கு மிகவும் முக்கியமானதாகும். இக்காலத்தில் காவல்துறையின் செயல்பாடுகள் மேலும் சிறப்பாக அமைவதற்கு பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நான் அறிவுறுத்த விரும்புகிறேன்.

* சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கண்டறியப்பட்டவுடன் முறையாக முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்.

* எக்காரணத்தைக் கொண்டும் அவை மக்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும் வண்ணம் பெரிய நிகழ்வுகளாக உருமாறுவதை தவிர்க்க வேண்டும்.

* அடுத்த ஓராண்டு காலத்திற்கு மக்களை பாதிக்கும் எந்த ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாத வண்ணம் உறுதி செய்ய வேண்டும்.

* நாடாளுமன்றத் தேர்தல் வர இருப்பதால், மிக மிக எச்சரிக்கையுடன் காவல்துறை அதிகாரிகள் அனைவரும் செயல்பட வேண்டும்.

* குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் விசாரிக்கப்படும் போது, கண்ணியத்துடன் நடத்தப்படவேண்டும். அவர்களை எந்த விதத்திலும் துன்புறுத்தக்கூடாது. காவல் மரணங்கள் முழுமையாகத் தடுக்கப்பட வேண்டும்.

* நமது அரசு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் எப்பொழுதுமே சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது.

இந்தியாவிலேயே நமது மாநிலத்தில்தான் பெண் குழந்தைகள் அதிகமாக பள்ளிக்கும், கல்லூரிக்கும் சென்று வருகிறார்கள். அதேபோல வேலைக்குச் செல்லும் பெண்களும் நாட்டிலேயே நமது மாநிலத்தில்தான் அதிகமாக இருக்கிறார்கள். கல்விக் கூடங்கள், பணியிடங்கள் மற்றும் பொது இடங்களில்
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது நம்முடைய தலையாய கடமை.

* பொதுமக்கள் மற்றும் பெண்களிடமிருந்து பெறப்படும் ஒவ்வொரு புகாரின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்கள் தண்டனை பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

* கடந்த சில மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நடந்த விரும்பத்தகாத நிகழ்வுகளால் சில உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதனையடுத்து என்னுடைய அறிவுரையின் பேரில், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மற்றும் கடும் நடவடிக்கைகளால், தற்பொழுது கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனை செய்தல் வெகுவாக குறைந்துள்ளது. இந்த நிலை தொடர, தொய்வின்றி கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி, கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனையை முற்றிலுமாக அகற்றுதலை உறுதி செய்திடவேண்டும்.

* இது குறித்து வாரம்தோறும் ஆய்வுக் கூட்டங்கள் நடத்திக் கண்காணிக்க வேண்டும்.

* மக்களிடமிருந்து பெறப்படக்கூடிய புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் பொழுது நடுநிலைமை தவறாமல் இருத்தல் வேண்டும்.

* புகார்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு விருப்பு வெறுப்பு இல்லாமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். காவல் நிலையங்களில் சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல், அங்கேயே பேசி முடித்துக் கொள்வதை அறவே தவிர்க்கவேண்டும்.

* போதை மருந்து நடமாட்டத்தை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

போதை என்பது அதனை பயன்படுத்தும் தனிமனிதரின் பிரச்சினை அல்ல! அது சமூகப்பிரச்னை! போதை என்பதை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்று சொல்வதற்குக் காரணம், சமூகத்தில் குற்றங்களை தடுக்க வேண்டும் என்பதும்தான். போதைதான் கொலை, கொள்ளை, பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்கு தூண்டுதலாக இருக்கிறது. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் போதை மருந்துகளை பயன்படுத்துபவர்களாக இருப்பார்கள். ஒவ்வொரு மாவட்ட எஸ்.பி.யும் தங்களது மாவட்டத்துக்குள் போதை விற்பனையை முற்றிலுமாகத் தடை செய்து விட்டேன் என்று மார்தட்டிச் சொல்லும் அளவுக்கு கட்டுப்படுத்தப்பட வேண்டும். சாதி, மத ரீதியான மோதல்களைத் தடுப்பது ஒரு பக்கம் என்றால், சமூக இணையத் தளங்களின் மூலமாக சாதி, மதரீதியான வன்மங்களைப் பரப்புவர்கள் அதிகமாகி வருகிறார்கள். 

இதையும் படிங்க;-  இனிமேல் அதிமுக கொடி மற்றும் சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த கூடாது.! எச்சரிக்கை விடுத்த ஜெயக்குமார்

Tamil Nadu is becoming a peace park... CM Stalin pride

அவர்களைக் கண்காணிக்க வேண்டும். அவர்கள்தான் சமூக அமைதியைக் கெடுக்க காரணமாக இருக்கிறார்கள். அவர்களால் அப்பாவிகள் பாதிக்கப்படுவார்கள். ஆனால் சொகுசாக உட்கார்ந்து கொண்டு இது போன்ற வன்மங்களை விதைப்பவர்கள் தப்பி விடுவார்கள். இப்படி நச்சுக்கருத்துகளை பரப்புவர்களைக் கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு காவல்துறை என்பது நடந்த குற்றங்களை கண்டுபிடிக்கும் துறையாக மட்டுமல்லாமல், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கும் துறையாகச் செயல்பட வேண்டும். கடந்த ஆண்டை விட, கடந்த மாதத்தை விட, குற்றம் குறைந்திருக்கிறது என்கிற புள்ளிவிவரம் வேண்டாம். குற்றமே நடைபெறவில்லை என்ற முற்றுப்புள்ளி விவரமே தேவை என்பதை அழுத்தமாகச் சொல்ல விரும்புகிறேன். உள்துறைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குனர் ஆகிய இருவரும் நான் மேலே கூறிய அறிவுரைகள் அனைத்தும், விடுதல் இன்றி மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios