bjp converting uttar pradesh full of saffron

ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு கலாச்சாரம் என்ற அடிப்படையில் மத்திய பாஜக அரசு செயல்பட்டுவருகிறது. அதற்காக மத்திய பாஜக அரசு முன்னெடுக்கும் சில நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகளும் சமூக நல அமைப்புகளும் கடுமையாக எதிர்க்கின்றன.

இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்க பாஜக அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால், பாஜகவோ அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியோ அல்லது ஆட்சியில் பங்கோ வகிக்க வேண்டுமென்பதில் குறியாக உள்ளது. உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், உத்தரகண்ட் உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான மாநிலங்களிலும் மத்தியிலும் பாஜக ஆட்சி பொறுப்பில் இருக்கிறது.

பாஜக ஆளும் மாநிலங்களில் உத்தர பிரதேசத்தில் அந்த கட்சியின் ஆதிக்கமும் ஆட்சியின் ஆதிக்கமும் சற்று அதிகமாக இருக்கிறது.

யோகி ஆதித்யநாத் முதல்வராக இருக்கும் உத்தர பிரதேசத்தில், சிறிது சிறிதாக அனைத்து அரசு அலுவலங்களிலும் காவி பெயிண்ட் அடிக்கப்பட்டு வருகிறது.

உத்தர பிரதேச தலைநகரம் லக்னோவில் உள்ள ஹஜ் கமிட்டி அலுவலகத்தின் எல்லை சுவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் காவி பெயிண்ட் அடிக்கப்பட்டது. 

அதேபோல லக்னோவின் கைசர் பாக் காவல்நிலையத்திற்கும் கடந்த மாதம் காவி பெயிண்ட் அடிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது கோமதி நகர் காவல்நிலைய கட்டிடத்திற்கும் காவி பெயிண்ட் அடிக்கப்பட்டு வருகிறது.

அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக உத்தர பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலக கட்டிடங்களுக்கும் காவி பெயிண்ட் அடிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இன்னும் சில மாதங்களில் உத்தர பிரதேசம் முழுவதுமாக காவிமயமாக காட்சியளிக்கும் அபாயம் உள்ளது அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.