ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிவாரணமாக குறைந்தது ரூ.7500 வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் இடைக்கால தலைவர்  சோனியா காந்தி தலைமையில் காணொலி காட்சி மூலமாக இன்று கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய சோனியாகாந்தி;-  போதுமான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத நிலையிலும், கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை தாங்கும் ஒவ்வொரு இந்தியருக்கும் நாம் வணக்கம் தெரிவிக்க வேண்டும். கொரோனா வைரஸால் உருவாகிய பொருளாதார பாதிப்பை சரி செய்ய அனைவரும் போராடி வரும் நிலையில், சமூகத்தில் வகுப்புவாத தவறான எண்ணங்களையும், வெறுப்பு வைரஸை பாஜக தொடர்ந்து பரப்பி வருகிறது.

பொருளாதார பாதிப்பை சரி செய்ய ஒவ்வொரு இந்தியரும், ஒவ்வொரு கட்சியும் உழைத்துவரும் போது இதுபோன்ற செயல்கள் கவலையளிக்கிறது. பாஜகவி்ன் செயல்கள் சமூக ஒற்றுமையை சீர்குலைத்திருக்கிறது. இந்த சேதங்களை சரி செய்ய காங்கிரஸ் கட்சி கடினமாகப் பணியாற்றும். கடந்த 3 வாரங்களாக கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க பரிசோதனையைத் தீவிரப்படுத்துங்கள் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஊரடங்கு கொண்டுவரப்பட்டதிலிருந்து பல்வேறு மீட்பு நடவடிக்கைகளை எடுக்கக்கோரியும், ஆக்கப்பூர்வான கூட்டுறவு கோரியும் பலமுறை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினேன்.

துரதிர்ஷ்டமாக அவர்கள் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைகளை பாதியளவுதான் ஏற்றார்கள், மற்றபடி மோசமான வழியில்தான் செல்கிறார்கள். இரக்கம், பெருந்தன்மை, எதற்கும் உற்சாகமாகத் தயாராவது போன்றவை மத்திய அரசிடம் வெளிப்படவில்லை. மக்களுக்கு சுகதாரம், உணவுப் பாதுகாப்பு, வாழ்வாதார விஷயங்கள் உறுதிபட கிடைக்க வகை செய்ய நோக்கமாக வைத்து காங்கிரஸ் கட்சி செயல்படும். முதல்கட்ட ஊரடங்கு கொண்டுவரப்பட்டபோதே நாட்டில் 12 கோடி பேருக்கு வேலைபோய்விட்டது. குறு,சிறு, நடுத்தர தொழில்களுக்கு அரசு பொருளாதார நிதித்தொகுப்பை வழங்க வேண்டும்.

கொரோனா வைரஸை ஒழிக்க பரிசோதனை, கண்காணித்தல், தனிமைப்படுத்துதல் இதைத்தவிர மாற்றுவழியில்லை என்று பிரதமர் மோடியிடம் தொடர்ந்த கூறியிருக்கிறோம். ஆனால் இன்னும் தொடர்ந்து பரிசோதனை அளவு குறைவாகவே இருக்கிறது, பரிசோதனைக் கருவிகள் தட்டுப்பாடு இருந்து வருகிறது. பொருளாதார நடவடிக்கைகள் மேலும் தேக்கமடையும் போது, நாட்டில் வேலையின்மை தொடர்ந்து அதிகரிக்கும். குறைந்தபட்சம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.7,500 வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.