சிவகங்கை தொகுதியில் திமுகபாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா போட்டியிட வசதியாக சிவங்கங்கை தொகுதியை பாஜக கேட்டுவருகிறது.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 5 தொகுதியில் நாகர்கோவில், கோவை ஆகிய தொகுதிகள் மட்டுமே தற்போதைய நிலையில் பாஜகவுக்கு உறுதியாகி இருக்கிறது. இன்னும் 3 தொகுதிகள் எவை என்பது பற்றி அதிமுகவும் பாஜகவும் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்ய உள்ளன.

அதிமுக - பாஜக இடையே தேர்தல் உடன்பாடு ஏற்பட்டபோதே, ஹெச்.ராஜா தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று அதிமுக தரப்பில்  நிபந்தனை விதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அந்தச் செய்தியை பாஜக தரப்பு மறுத்துவிட்டது. இந்நிலையில் பாஜக போட்டியிட வேண்டிய 3 தொகுதிகள் எவை என்பது பற்றிய ஆலோசனைகள் பாஜகவில் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.

அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா போட்டியிட வசதியாக சிவகங்கை தொகுதியைப் பெற வேண்டும் என்று மேலிடத்திலிருந்து தற்போது அழுத்தம் கொடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவார் என்று எதிர்பார்ப்பு உள்ளதால், அவரை எதிர்த்து போட்டியிட ஹெச். ராஜாவே சரியான நபர் என்று பாஜக மேலிடம் நம்புகிறது.

அண்மையில் திருப்பூரில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ப. சிதம்பரத்தின் பெயரைக் குறிப்பிடமால் தாக்கி பேசினார். பாஜகவைத் தொடர்ந்து கடுமையாக விமர்சித்துவரும் சிதம்பரத்துக்கு பதிலடி கொடுக்க ஹெச். ராஜா போன்ற வேட்பாளரே தேவை என்பதால், அந்தத் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கும்படி அதிமுகவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சிவகங்கை தொகுதியில் ஹெச். ராஜா போட்டியிட வேண்டும் என்பதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் ஆர்வம் காட்டிவருகிறது. திமுக- காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து கடும் போட்டியை ஹெச். ராஜாவால் மட்டுமே ஏற்படுத்த முடியும் என்பதால், அந்தத் தொகுதி பாஜகவுக்கு கேட்டு பெறப்படும் என்று பாஜக வட்டாரங்கள் உறுதியாகத் தெரிவிக்கின்றன.