கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், திமுகவின் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் கீழ் மக்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன. அவற்றில், ஒரு லட்சம் கோரிக்கை மனுக்களை கடந்த 13ம் தேதி தலைமை செயலாளர் சண்முகத்திடம் திமுக எம்பிக்கள் வழங்கினர்.

மனுக்களை தலைமை செயலாளரிடம் கொடுத்த பின்னர் திமுக எம்பிக்களான தயாநிதி மாறன் மற்றும் டி.ஆர்.பாலு செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது, தலைமை செயலாளர் சண்முகம், எம்பிக்களான தங்களை மூன்றாம் தர மக்கள் போல நடத்தியதாகவும் நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா என்று சர்ச்சைக்குரிய வகையில் தயாநிதி மாறன் பேசினார். 

தயாநிதி மாறனின் இந்த சர்ச்சை கருத்து, அவரது அடிமனதில் சாதி வன்மம் படிந்திருப்பதை காட்டுவதாக  அவர் மீது விமர்சனங்களை எழுப்பியதுடன், அவர் மீதான மதிப்பை சரித்தது. திமுகவின் கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியே, தயாநிதி மாறனின் கருத்துக்கு அதிருப்தியும் எதிர்ப்பும் தெரிவித்தது.

கூட்டணி கட்சியே எதிர்ப்பு தெரிவிக்கும்போது, எதிரி கட்சியான பாஜக சும்மா இருக்குமா..? பாஜக பட்டியல் அணி சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியரிடம், தயாநிதி மாறன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

அந்த மனுவில், தமிழக தலைமைச் செயலரை கடந்த 13ம் தேதி திமுக எம்.பி.க்கள் தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தபோது தயாநிதி மாறன், தலைமை செயலர் எங்களை மூன்றாம் தர மக்கள் போல் நடத்தினார். நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா எனக் கேள்வியெழுப்பினார்.

தாழ்த்தப்பட்ட மக்களைத்தான் மூன்றாம் தர மக்களாக நடத்துவார்கள்; மற்ற சாதியினரை அப்படி நடத்தமாட்டார்கள் என்பதை பறைசாற்றுவதாக தயாநிதி மாறனின் பேச்சு அமைந்துள்ளது. அவரது பேச்சு எதிர்காலத்தில் ஆதிக்க சமூகத்தினரும் இதேபோல பேசுவதற்கு வழிவகை செய்யும்.

அவரது பேச்சு, பட்டியல் சமூக மக்களைக் கேவலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. எனவே தயாநிதி மாறன் மற்றும் டிஆர்.பாலு ஆகியோர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.